“தமிழக அரசே போராட விடு” - தொழிலாளர்களுக்கு பா.ரஞ்சித் ஆதரவு
தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தினை துவங்கி அதனை அங்கீகரிக்க கோரி, தொழிலாளர்கள் சம்சங் நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தனர். ஆனால் கடிதம் அனுப்பியும் எவ்வித பதில் அளிக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தொழிலாளர்கள் மத்தியில் கூறப்பட்டது.
அந்த நிலையில் விரக்தி அடைந்த தொழிலாளர்கள் சிஐடியு தொழிற்சங்கம் தலைமையில் 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில், மூன்று அமைச்சர்கள் முன்னிலையில் samsung நிர்வாகிகள் தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் மத்தியில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து 31வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 800க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளாக சிபிஐ, சிபிஎம், விசிக, காங்கிரஸ், மமக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் இந்த விவாகரத்தில் முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும். இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.
தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை. தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும். தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு” என பதிவிட்டுள்ளார்.
What's Your Reaction?