அமலுக்கு வந்த தேர்தல் விதிகள் : பின்பற்றாத பறக்கும் படையினர்...

அரசியல் கட்சிகளின் விளம்பர போஸ்டர்கள் மற்றும் பதாகைகளை அகற்றவில்லை என மக்கள் குற்றச்சாட்டு

Mar 17, 2024 - 21:45
அமலுக்கு வந்த தேர்தல் விதிகள் : பின்பற்றாத பறக்கும் படையினர்...

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்தைக் கடந்த பின்பும் கரூரில் திமுக மற்றும் பாஜகவின் விளம்பர போஸ்டர்கள் அகற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் நேற்று ( மார்ச் 16) அறிவித்தது. இதையடுத்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனால், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் உள்ள தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன. மேலும், அரசியல் கட்சிகளின் விளம்பர பதாகைகள் மற்றும் போஸ்டர்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில்,  கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, ஐந்து ரோடு ஆகிய பகுதிகளில் திமுக மற்றும் பாஜக கட்சிகள் சார்பில் ஒட்டப்பட்டுள்ள விளம்பர போஸ்டர்களும், பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து 24 மணி நேரத்தை கடந்தும் போஸ்டர்கள் அகற்றப்படவில்லை. மாவட்டம் முழுவதும் 12 பறக்கும் படை குழுவினர் உட்பட 28 வாகனங்களில் கண்காணிப்பு குழுவினர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், மாநகரின் முக்கிய பகுதிகளில் கட்சி போஸ்டர்களை அகற்றாமல் மெத்தனத்துடன் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow