தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவின் ஊழல் அம்பலமாகியுள்ளது! இந்தியா கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்...
இந்தியா தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
மும்பையில் நடைபெற்ற பாரத ஒற்றுமைப் பயண நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8000 கோடி பெற்றுள்ள பிரதமர் மோடி, ஊழலைப் பற்றி பேசக்கூடாது என்று சாடினார்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ராகுல் காந்தியின் பாரத ஒற்றுமை நியாய யாத்திரை நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றனர். அதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது வணக்கம் கூறி உரையைத் தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் யாத்திரையைப் பற்றி புகழ்ந்து பேசினார். தொடர்ந்து பேசிய அவர், மக்களைப் பிரிக்க நினைக்கும் பாஜக அரசை விரைவில் அகற்ற வேண்டும் என்று பேசினார்.
வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வது, போலி பரப்புரைகளைச் செய்வது என்ற இரண்டைத் தவிர பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக வேறு எதுவும் செய்யவில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியா கூட்டணி உருவான நாளிலிருந்து பாஜகவினர் இந்தியா என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே அஞ்சுவதாகக் குறிப்பிட்டார். மேலும், இந்தியா கூட்டணியை ஊழல் கூட்டணி என்று விமர்சித்த பிரதமருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்று கூறிய முதலமைச்சர், தேர்தல் பத்திரங்கள் முறைகேடு மூலம் ரூ.8,000 கோடி ஊழல் செய்துள்ளது அம்பலமாகியுள்ளதாகவும் விமர்சித்தார். பாஜகவின் இந்த ஊழலையும், அரசின் தோல்விகளையும் மறைப்பதற்காகவே, பிரதமர் இந்தியா கூட்டணி மீது பொய் குற்றச்சாட்டுகளை வைத்து மக்களைத் திசைதிருப்பி வருவதாகச் சாடினார். பாஜகவால் சீரழிக்கப்பட்ட நாட்டை இந்தியா கூட்டணி மீட்கும் என்று தெரிவித்த முதலமைச்சர், கன்னியாகுமரியில் தொடங்கிய பாரத ஒற்றுமை நியாய யாத்திரையின் வெற்றி, டெல்லியைக் கைப்பற்றுவதில்தான் இருக்கிறது என்று பேசினார்.
What's Your Reaction?