“உங்கள் ஆசையை எல்லாம் அரசாங்கத்தால் செய்து கொடுக்க முடியாது” - கட்டண உயர்வுக்கு அமைச்சர் சொன்ன நச் பதில்...
50 ஆயிரம் செயலியையும் உட்கார்ந்துகொண்டு அரசு கண்காணிக்க முடியாது,....
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளை நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் இயக்குவது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
தீபாவளிப் பண்டிகையையொட்டி 14,086 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பண்டிகைகளின்போது சொந்த ஊர்களுக்குச் செல்லவிருக்கும் மக்கள் அவதியுறும் வகையில் வழக்கத்தைவிட பன்மடங்கு அதிகமாக
டிக்கெட் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில், பண்டிகைக் காலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவண்ணம் பேருந்துகளை இயக்க பேருந்து உரிமையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்: முறையாக பதிவு செய்த அம்னி பேருந்துகள் குறைந்த கட்டணங்களே வசூலிப்பதாகவும், புதிதாக பேருந்து வாங்குபர்களே செயலிகள் மூலம் அதிக கட்டணங்கள் வசூலிப்பதாக தெரிவித்தார். மேலும், இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், பொதுவாக அனைத்து பேருந்துகளிலுமே அதிக அளவில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை எனவும், சொகுசு பயணம் மேற்கொள்ள நினைக்கும் மக்களே அதிக அளவில் கட்டணங்கள் செலுத்தி பயணிப்பதாக தெரிவித்தார்.
மேலும், தீபாவளியை முன்னிட்டு 1000 தனியார் பேருந்துகள் தயார் நிலையில் இருக்க அறுவுறுத்தியுள்ளதாகவும் விழுப்புரம் கோட்டத்தில் தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், கடந்த ஆண்டும் தீபாவளியின்போதும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களோடு ஆலோசனை நடத்தப்பட்டது, அதன்பின், எவ்வித கட்டண உயர்வுமின்றி பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், ஒரு சில புகார்கள் மட்டுமே வந்ததாகவும் அவற்றுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். அதேபோல, இந்த ஆண்டும் ஆலோசனை நடத்தி அரசு சார்பில் சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார். “கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளியின் போது கட்டண உயர்வு இல்லாமல் பேருந்துகளை இயக்குவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உறுதி அளித்துள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.