ChatGPT Go: இந்தியர்களுக்காக ரூ.399-ல் புதிய திட்டம் அறிமுகம்!

OpenAI நிறுவனம் இந்தியாவில் ₹399-க்கு புதியதாக ChatGPT Go திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தில் இணைவதன் மூலம், கூடுதல் வசதிகளை பயனர்கள் இனி பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.

ChatGPT Go: இந்தியர்களுக்காக ரூ.399-ல் புதிய திட்டம் அறிமுகம்!
OpenAI launches ChatGPT Go plan in India for just ₹399 with premium features

நாளுக்கு நாள் செயற்கை நுண்ணறிவின் (AI) பயன்பாடு அனைத்து துறைகளிலும் அதிகரித்து வருகிறது. AI தொழில்நுட்பத்தில் ChatGPT, gemini, grok, perplexity போன்றவை முன்னணி வகிக்கிறது. 

சமீபத்தில், perplexity இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லுடன் கைக்கோர்த்தது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட காலத்திற்கு அதன் ப்ரீமியம் (perplexity pro) செயல்பாட்டினை இலவசமாக அணுகும் வாய்ப்பினை வழங்கியது perplexity நிறுவனம். இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் தான் இந்தியாவில் தனது பயனர்களின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில், OpenAI நிறுவனம் இந்தியாவில் 'ChatGPT Go' என்ற புதிய சந்தா திட்டத்தை ₹399 என்கிற மாதக் கட்டணத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் வாயிலாக இந்தியப் பயனர்கள் இனி அதிகப்படியான பயன்பாட்டு வரம்புகள் (higher usage limits), பட உருவாக்கம் (image generation), கோப்புப் பதிவேற்றம் (file uploads) மற்றும் நினைவகம் (extended memory) போன்ற பிரபலமான அம்சங்களை அணுகலாம்.

இதுக்குறித்து OpenAI-யின் துணைத் தலைவர் மற்றும் ChatGPT தலைவர் நிக் டர்லி கூறுகையில், ”இந்த 'ChatGPT Go' திட்டம் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்தப்படும். இந்தியப் பயனர்களிடமிருந்து வந்த மிகப்பெரிய கோரிக்கைகளில் ஒன்று, ChatGPT ப்ரீமியம் அம்சங்களினை பயன்படுத்துவதற்கான விலையினை, இந்திய மதிப்பில் நிர்ணயிக்க வேண்டும் என்றுதான். இந்த புதிய திட்டம் இந்திய பயனர்களின் கோரிக்கைகளை நேரடியாக பூர்த்தி செய்வதோடு, அவர்களின் நம்பிக்கையினை பெறவும் வழிவகுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

ChatGPT Go: புதிய திட்டத்தின் நன்மைகள்

இலவச திட்டத்துடன் ஒப்பிடும்போது 'ChatGPT Go' திட்டத்தில் பயனர்களுக்கு 10 மடங்கு அதிக செய்தி வரம்புகள், 10 மடங்கு அதிக பட உருவாக்கம், 10 மடங்கு அதிக கோப்புப் பதிவேற்றங்கள் மற்றும் 2 மடங்கு extended memory ஆகியவை கிடைக்கும். இது இலவசத் திட்டம் போதாது என்று கருதும் மாணவர்கள், பகுதி நேர வேலை செய்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு ஒரு நல்ல தேர்வாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்திய மதிப்பில் கட்டண விருப்பங்கள்:

மற்றொரு முக்கியமான அம்சம், சந்தா திட்டங்களுக்கு இந்திய ரூபாயில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும், இனிமேல் ’கோ”, 'ப்ளஸ்' அல்லது 'புரோ' திட்டங்களில் இணைவதற்கான சந்தா தொகையானது இந்திய மதிப்பில் ரூபாயில் காண்பிக்கப்படும். முன்னதாக இது டாலரில் காண்பிக்கப்பட்டது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் மாற்றம் ஏற்படும். விலைகள் மாறி மாறி வந்ததால், பல பயனர்கள் ChatGPT  ப்ளஸ் மற்றும் ப்ரோ திட்டங்களில் இணைய தயக்கம் காட்டி வந்தனர். தற்போது அதற்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

முதன்முறையாக, இந்தியாவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் கட்டண முறையான யுபிஐ (UPI) வழியாக சந்தா தொகையினை செலுத்தவும் OpenAI அனுமதி வழங்கியுள்ளது.

தற்போது, ChatGPT-ல் நான்கு திட்டங்கள் உள்ளன: பயன்பாடு வரம்புடன் கூடிய இலவசத் திட்டம், புதிய 'Go' திட்டம் ₹399, 'Plus' திட்டம் ₹1,999 மற்றும் 'Pro' திட்டம் ₹19,999. இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'Go' திட்டம், இலவச மற்றும் 'Plus' திட்டங்களுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் என OpenAI நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow