நெருங்கும் விநாயகர் சதுர்த்தி: ரூ.474 கோடிக்கு காப்பீடு பெற்ற கணேஷ் மண்டல்!
மும்பையின் மிகப்பெரிய பணக்கார கணேஷ் மண்டல் என அறியப்படும் ஜி.எஸ்.பி. சேவா மண்டல், இந்த ஆண்டு ₹474.46 கோடி மதிப்புள்ள காப்பீட்டைப் பெற்றுள்ளது.

ஜிஎஸ்பி சேவா மண்டல் என்பது 1951 ஆம் ஆண்டு இந்தியாவின் மும்பையில் நிறுவப்பட்ட ஒரு இலாப நோக்கற்ற ஆன்மிக அமைப்பாகும். இது 1950 ஆம் ஆண்டு பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளை ஒருங்கிணைப்பது இதன் முக்கிய பணியாகும். தன்னார்வலர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலம் பெறப்படும் பணமானது சமூக நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி முதன்மையான விழாவாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்திக்கு என்ற பிரத்யேக நிகழ்வினை ஒருங்கிணைப்பதன் மூலம் உலக புகழ்பெற்றது ஜி.எஸ்.பி.சேவா மண்டல். நன்கொடையாளர்கள் ஜி.எஸ்.பி. சேவா மண்டல் ஒருங்கிணைக்கும் நிகழ்விற்கு நன்கொடைகளை வாரி வழங்குவதன் மூலம், ஜிஎஸ்பி சேவா மண்டல், மும்பையின் மிகப் பெரிய பணக்கார கணேஷ் மண்டல் என்கிற பெயரை பெற்றது.
இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் 27 முதல் 31 வரை மும்பையிலுள்ள ஸ்ரீ சுக்ரதீந்திர நகரில், கிங்ஸ் சர்க்கிளில் ஜி.எஸ்.பி.சேவா மண்டல் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்விற்கு முன்னதாக சுமார் ரூ.474 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்துள்ளது ஜி.எஸ்.பி.சேவா மண்டல்.
காப்பீடு தொகை எதற்காக?
எதிர்பாராத இழப்புகள் அல்லது விபத்துகள் ஏற்பட்டால் அதற்கான நிதியுதவி அல்லது இழப்பீடு பெறுவதற்காக காப்பீடு திட்டம் உள்ளது. அரசுக்குச் சொந்தமான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீட்டை பெற்றுள்ளது ஜி.எஸ்.பி சேவா மண்டல்.
மொத்த மதிப்பான ₹474.4 கோடி காப்பீட்டில், தனிநபர் விபத்துக் காப்பீட்டுக்கு அதிகபட்சமாக ₹375 கோடி (personal accident cover) ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.எஸ்.பி சேவா மண்டலத்தின் தன்னார்வலர்கள், சமையல்காரர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பிற பணியாளர்களை அடங்குவார்கள். இதற்கு அடுத்தபடியாக, தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற ஆபகரணங்களுக்காக ₹67 கோடி ரூபாய் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
₹30 கோடி மதிப்பில் பொதுப் பொறுப்பு (public liability cover) காப்பீட்டையும், மேஜை, சாதனங்கள் மற்றும் பிற பொருட்களுக்காக ₹2 கோடி மதிப்பில், தீ மற்றும் சிறப்பு ஆபத்துக் காப்பீட்டையும் (standard fire and special perils policy) மண்டல் எடுத்துள்ளது. கூடுதலாக, நிகழ்வு நடைபெறும் வளாகத்திற்கான நிலையான தீ மற்றும் சிறப்பு ஆபத்துக் காப்பீடு ₹43 லட்சம் மதிப்புடையது.
ஜி.எஸ்.பி. சேவா மண்டலின் தலைவர் அமித் பாய் கூறுகையில், "தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வு மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவற்றால் காப்பீட்டுத் தொகை அதிகரித்துள்ளது. விழா திறந்தவெளியில் நடப்பதால் மழை ஒரு கவலையாக இருந்தாலும், நாங்கள் மழை-தடுப்பு அமைப்பை உருவாக்கியுள்ளோம். இதுவரை எந்த நீர் கசிவையும் காணவில்லை. நீர் தேங்குவது ஒரு கவலைதான், ஆனால் அது பெரிய பிரச்சினை அல்ல" என்றார்.
கடந்த ஆண்டுகளில் காப்பீடு எவ்வளவு?
ஜி.எஸ்.பி.சேவா மண்டல் சார்பில் கடந்த சில ஆண்டுகள் எடுக்கப்பட்ட இன்சூரன்ஸ் தொகை விவரங்கள் பின்வருமாறு-
2022 ஆம் ஆண்டு- ரூ.316.4 கோடி
2023 ஆம் ஆண்டு- ரூ360.4 கோடி
2024 ஆம் ஆண்டு- ரூ.400.58 கோடி
2025 ஆம் ஆண்டு- ரூ.474.46 கோடி
அதிகரித்து வரும் நிகழ்வுக்கான காப்பீடு:
விநாயகர் சதுர்த்தி, தஹி ஹண்டி மற்றும் துர்கா பூஜை போன்ற முக்கிய மத விழாக்களை முன்னிட்டு நிகழ்வுக் காப்பீடு சமீப காலமாக அதிகரித்துள்ளது. நிகழ்வு அமைப்பாளர்களிடையே எதிர்பாராத அபாயங்களிலிருந்து தங்கள் நிகழ்வுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளதே இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அமர்நாத் சக்சேனா கூறுகையில், "கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, நிகழ்வுக் காப்பீடு பெறுவது கணிசமாக அதிகரித்துள்ளது. இது நிகழ்வு அமைப்பாளர்களிடையே வளர்ந்து வரும் விழிப்புணர்வைக் காட்டுகிறது. குறிப்பாக, விநாயகர் மண்டல்களிடமிருந்து வரும் விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. ஆண்டுக்கு ஆண்டு நிகழ்வுக் காப்பீட்டுக்கான விண்ணப்பங்கள் 50 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.
What's Your Reaction?






