வேலுமணி - ஓபிஎஸ் கூட்டணியா? ஒரேபோடு போட்ட மகன்... கலக்கத்தில் அதிமுக கூடாரம்!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுக கூடாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sep 19, 2024 - 20:39
வேலுமணி - ஓபிஎஸ் கூட்டணியா? ஒரேபோடு போட்ட மகன்... கலக்கத்தில் அதிமுக கூடாரம்!

கடந்த 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில் அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. 

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது, மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்ததாகவும், அவரும் அதிகாரிகளும் சேர்ந்து ரூ.26.61 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான புகார், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அதிமுக மூத்த நிர்வாகிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.இந்நிலையில், அதிமுக கூடாரமே ஷாக்காகும் அளவிற்கு எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக ஓபிஎஸ் மகன் அறிக்கை வெளியிட்டுள்ளதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவை ஒன்றிணைக்க, மூத்த நிர்வாகிகள் தலைமையில் ஆறு பேர் கொண்ட குழுவினர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினர் என்ற வதந்தி வந்தது. இதனை உளவுத்துறை மூலம் அறிந்துகொண்டு அதிமுக ஒன்றிணைந்தால் 2026ல் ஆட்சி பறிபோகிவிடும் என்று திமுக தலைவர் அச்சமடைந்ததாகவும் ஓபிஸின் மகன் ஜெயபிரதீப் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இணைப்புப் பேச்சு என்ற வார்த்தையை எஸ்.பி.வேலுமணியே முன்னெடுத்ததாகவும், அதை தடுப்பதற்காகவும் நெருக்கடி கொடுக்கப்பதற்காகவும் அரசு அவசர அவசரமாக வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த அறிக்கையை பார்த்த எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பெரும் அதிர்ச்சியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே எஸ்.பி.வேலுமணி உட்பட அதிமுக மூத்த நிர்வாகிகள் இணைப்புப் பணியில் தீவிரம் காட்டியதாகவும், அதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதோடு, எஸ்.பி.வேலுமணி ஓபிஎஸ் அணியுடன் நெருக்கமாக உள்ளதாகவும், அவர்தான் ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என்று முதலில் அடித்தளம் போட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதனால் எஸ்.பி.வேலுமணி கோஷ்டிக்கும் எடப்பாடி ஆதரவு கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அதெல்லாம் ஒன்றுமில்லை எடப்பாடி தலைமையில் அதிமுக சிறப்பாக இயங்கி வருவதாகக் தகவல்கள் வெளியாகின. 

தற்போது, ஓபிஎஸ் மகனே அதனை உறுதிப்படுத்தியுள்ளதால், அதிமுக கூடாரமே உறைந்துபோயுள்ளது. ஒருங்கிணைப்புக்காக மட்டுமா அல்லது எடப்பாடிக்கு எதிராக வேலுமணி வேலை செய்கிறாரா? என எடப்பாடி ஆதரவாளர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow