world Championship of Legends: இந்தியாவுக்கு எதுக்கு பாயிண்ட்? பாகிஸ்தான் அணி அதிருப்தி!
இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் (WCL- world Championship of Legends) கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில் தற்போது புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
பஹல்காமில் நடந்த சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான உறவில் இருந்த விரிசல் இன்னும் அதிகரித்தது. பஹல்காம் தாக்குதலை மேற்கொள் காட்டி, உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானுடன் விளையாட மறுத்துவிட்டதே இந்தப் போட்டி ரத்து செய்யப்பட்டதற்குக் காரணம் என தகவல்கள் வெளியாகியது.
தற்போது வெடித்துள்ள புதிய சர்ச்சை என்னவென்றால், போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்க முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து பாகிஸ்தான் அணி தரப்பில் கூறுகையில் “போட்டி வேண்டாம் என்று முடிவெடுத்தது இந்தியா தான், நாங்கள் விளையாட தயாராகவே இருந்தோம். புள்ளிகளை பகிர்ந்தளிப்பது என்பது எந்த வகையிலும் நியாயமில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
மௌனம் கலைத்த கமிட்டி:
பாகிஸ்தான் அதிருப்தியினை தொடர்ந்து உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் கமிட்டி இந்த விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் (ECB), ”போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு இந்திய அணி காரணம் அல்ல. போட்டியானது ஏற்பாட்டாளர்களால் நடத்த முடியவில்லை” என உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, தற்போது இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் உள்ளிட்ட முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராகப் போட்டியில் பங்கேற்க மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் தனது சமூக வலைத்தள பதிவில், ”எனக்கு என் நாடு தான் பெரியது. நான் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறேன் (பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட மாட்டேன்)” எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
மீண்டும் மோதுமா? என்னவாகும் தொடர்?
ஜூலை 18 ஆம் தேதி தொடங்கிய உலக லெஜண்ட் சாம்பியன்ஸ் லீக் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் என மொத்தம் 6 அணிகள் பங்கேற்றுள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைப்பெற உள்ளது. ஒருவேளை இந்தியா- பாகிஸ்தான் அணி அரையிறுதியிலோ? இறுதிப்போட்டியிலோ? சந்திக்க நேர்ந்தால் மீண்டும் இந்திய அணி விளையாட மாட்டோம் என்கிற முடிவை எடுப்பார்களா? என்கிற கேள்வி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
What's Your Reaction?






