ஆக.,10 வரை அன்புமணிக்கு கெடு? முக்கிய முடிவுக்கு தயாராகும் ராமதாஸ்!

ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கட்சி அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான போட்டி நடைப்பெற்று வரும் நிலையில், ஆகஸ்ட் 10-க்குள் அன்புமணி சமரசத்துக்கு வரவில்லையெனில், முக்கிய முடிவொன்றை எடுக்க ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆக.,10 வரை அன்புமணிக்கு கெடு? முக்கிய முடிவுக்கு தயாராகும் ராமதாஸ்!
pmk leader ramadoss sets deadline for anbumani

தந்தை- மகனுக்கு இடையிலான அதிகார யுத்தம் கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், மகனுடனான தாயின் சந்திப்பை தொடர்ந்து அனலின் தாக்கம் சற்று குறைந்திருக்கிறது. இதையடுத்து, சமாதானத்துக்கான வேலைகள் விறுவிறுக்க, அதற்கு ராமதாஸ் காலக்கெடுவை நிர்ணயித்து அதிரடிக்கு தயாராவதாக வரும் தைலாபுர தோட்டத்திலிருந்து தகவல்கள் வருகின்றன.

இதுகுறித்து பேசும் பா.ம.கவின் உள்விவகாரம் அறிந்த நிர்வாகிகள் சிலர், "அய்யாவின் மனைவி சரஸ்வதி அம்மா, சமீபத்தில் அன்புமணியை சந்தித்து சமரசம் பேசியிருந்தார். இந்த சந்திப்பின்போது தந்தையின் பேச்சுக்கள் குறித்து தாயிடம் மனம் வருந்திய அன்புமணி, ஒருவழியாக சமாதான முடிவுக்கு வந்திருக்கிறார். இதையடுத்துதான், அய்யாவும் அன்பு மணியும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொள்ளாமல் அமைதிகாக்க தொடங்கியிருக்கின்றனர்.

அன்புமணிக்கு சம்மந்தமில்லை?

கடந்த ஜூலை 17ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அய்யா, அன்புமணியை அட்டாக் செய்வதை தவிர்த்து பாமக மகளிரணி மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அவர் வரலாம், வராமலும் போகலாம்' என ஒரு நாட் வைத்தே பேசினார்.

இதற்கிடையே, அய்யா வீட்டிலிருந்த ஒட்டுக்கேட்பு கருவி பற்றி தனியார் துப்பறிவு நிறுவனம் ஒன்று ஆய்வு செய்யும் நிலையில், பாமக சார்பில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீஸிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து ராமதாஸ் இல்லத்தில் சைபர் கிரைம் போலீஸார் ஆய்வு செய்தனர். பின், ஆய்வுக்காக ஓட்டுக்கேட்பு கருவியை அதிகாரிகள் கேட்டபோது, 'தனியார் அமைப்பின் ரிப்போர்ட் வரும் வரை தரமுடியாது என மருத்துவர் ராமதாஸ் மறுத்துவிட்டார்.

இந்த நிலையில், கருவி யாருடனெல்லாம் தொடர்பில் இருந்தது என டிராக் செய்ய ஆரம்பித்திருக்கும் சைபர் போலீஸார், இச்சம்பவம் தொடர்பாக மருத்துவர் இராமதாஸிடம் 20 கேள்விகளை கேட்டனர். அதற்கும் 'அன்புமணிக்கு இதில் சம்பந்தமில்லை' என்பது போலத்தான் பதில் கொடுத்திருக்கிறார்.

இருவருக்குமான சமாதான பேச்சு கூடி வரும் வேளையில், ஓட்டுக்கேட்பு கருவி விஷயத்தை பெரிதுப்படுத்த வேண்டாம். தேர்தல் நெருங்குவதற்குள் நீங்கள் இருவரும் இணைவதுதான் கட்சிக்கும், குடும்பத்துக்கும் நல்லது’ என குடும்ப உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளவே தான், கருவியால் எந்த சலசலப்பும் ஏற்பட்டுவிட கூடாதெனவும், தனியார் நிறுவன ரிப்போர்ட்டில் ஏதாவது தெரியவந்தால் அப்போது பார்த்துக்கொள்ளலாம் என அய்யா கருவியை ஆய்வுக்கு தர மறுத்துவிட்டார்.

ஆகஸ்ட் 10 மகளிர் மாநாடு:

இதற்கிடையே, ஆகஸ்ட் 10ம் தேதி பூம்புகாரில் நடக்கும் மகளிர் மாநாட்டில் இருவரையும் ஒன்றாக மேடையேற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. எனவே அதற்கான அழைப்பிதழிலும் அன்புமணி பெயர், படங்களை அச்சிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

மேலும் ஆகஸ்ட் 10-க்குள்ளாக ’உங்கள் விருப்பப்படி நான் செயல் தலைவராகவே இருந்து செயல்படுகிறேன்' என அன்புமணி சமரசத்துக்கு வரவில்லையெனில், மாநாட்டுக்கு முன்பாக பொதுக்குழுவைக் கூட்டி, அன்புமணி பதவி தொடர்பாக அதிரடி முடிவொன்றை அறிவிக்க ராமதாஸ் முடிவு செய்திருக்கிறார். இல்லையேல், மாநாடு மேடையிலேயே அந்த அறிவிப்பு இருக்கும். அது பெரும்பாலும் அன்புமணி நீக்கம் குறித்ததாகவோ அல்லது டம்மி பொறுப்பில் தொடர்வார் என அறிவிப்பதாகவோதான் இருக்கும் என்றனர்.

இதுகுறித்து பாமக எம்.எம்.ஏ அருளிடம் பேசினோம். ”அன்புமணி அவர்கள் அய்யாவை சந்தித்து ஒன்றுசேர வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. அதைத்தான் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்றார்.

(கட்டுரையாளர்: அ.கண்ணதாசன்/ குமுதம் ரிப்போர்ட்டர்/ 25.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow