கள்ளக்குறிச்சி மரணங்கள் பதற வைக்குது.. சட்டசபையில் நியாயம் கிடைக்கவில்லை.. எடப்பாடி பழனிச்சாமி
கள்ளக்குறிச்சி மரணம் குறித்து பேசுவதற்கு சபாநாயகர் அப்பாவு மறுத்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பிரச்சனையை அரசு கவனத்திற்கு கொண்டு வருவது எங்களின் தலையாய கடமை என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் என்றும் நாட்டையே உலுக்கியுள்ள சம்பவம் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் எங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி,
நாட்டின் பிரச்சனையை அரசு கவனத்திற்கு கொண்டு வருவது எங்களின் தலையாய கடமை என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாரயம் குடித்தவர்கள் 50 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சட்டசபையிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. அதிமுக எம்எல்ஏக்கள் கறுப்பு சட்டை அணிந்து வந்து அமளியில் ஈடுபட்டதால் அவைக்காவலர்களால் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, கள்ளச்சாராயத்தால் 148 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் 50 பேர் உயிரிழந்ததாகவும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 16 பேர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி விவகாரம் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம். நாட்டையே உலுக்கியுள்ள சம்பவம்.நாட்டின் பிரச்சனையை அரசு கவனத்திற்கு கொண்டு வருவது எங்களின் தலையாய கடமை. ஏழை எளிய தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் கள்ளச்சாராயம் குடித்து இறந்துள்ளனர். அரசு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை.
இது குறித்து பேச அனுமதி கேட்ட எங்களை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி உதயகுமாரை குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றி கைது செய்யும் அளவிலான நடவடிக்கையை அரசு செயல்படுத்தியுள்ளது.
ஹிட்லர் ஆட்சி போன்று சர்வாதிகார ஆட்சியை அரசு இங்கு செயல்படுத்தி வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்யும் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது.கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும்.
திறமையற்ற அரசாங்கம். பொம்மை முதலமைச்சர். கள்ளக்குறிச்சி மரணம் யாராலயும் ஏற்றுக்கொள்ள முடியாது.நீதிமன்ற வளாகத்தை ஒட்டியே கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நடமாடும் மையப்பகுதியிலேயே கள்ளக்குறிச்சியில் 3ஆண்டு காலமாக கள்ளச்சாராய வியாபாரம் நடைபெற்று வருகிறது.
பாதிப்பு குறித்து அரசு வெளிப்படையாக அறிவிக்கவில்லை. முறையான சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவமனைகளில் போதிய சிகிச்சைகளோ மருந்துகளோ இல்லை.
ஓமிபிரஸொல் எனும் மருந்துதான் சாராயத்தை குணப்படுத்தக்கூடிய மருந்து இம்மருந்து மருத்துவமனையில் அறவே இல்லை. 3 பேர் உயிரிழந்த போதே உண்மை செய்தியை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருந்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனையை சேர்க்கப்பட்ட அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கலாம். இதன் மூலம் பல உயிர்களை காப்பாற்றி இருக்கலாம். மக்களின் உயிர் போனதற்கு காரணம் இந்த அரசாங்கம்தான். அரசாங்கத்தின் தூண்டுதலின் பேரிலே மாவட்ட ஆட்சியர் தவறான தகவலை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் உளவுத்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது.
முதலிலேயே சரியான தகவலை மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தால் இத்தனை உயிர்கள் பறிபோயிருக்காது. அதிக அளவில் கள்ளச்சாராயம் குடித்திருக்க மாட்டார்கள். இந்த மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இந்த சர்வாதிகார ஆட்சி நீடிக்க வேண்டுமா? எல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?