"குடிநீர் எங்க?" - தென்காசியில் மக்கள் சாலைமறியல்..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே முறையாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டர் பகுதியில் கடந்த சில நாட்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யவில்லை என கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு முன் இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியாக நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததாகத் தெரிகிறது.
ஆனால், ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த மக்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சாலைமறியல் காரணமாக திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து சென்ற செங்கோட்டை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
What's Your Reaction?