வரலாறு காணாத அளவு உயர்ந்தது தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் வரலாறு காணாத அளவு பவுனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக சவரனுக்கு 440 ரூபாய் வரை குறைந்திருந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சவரனுக்கு 480 ரூபாய் அதிகரித்தது. கிராமுக்கு 60 உயா்ந்த நிலையில் ஒரு கிராம் 6,885 ரூபாய்க்கும் ஒரு பவுன் 55,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் வாங்குபவர்களை விழி பிதுங்க வைப்பதைப் போல் விலை உயர்வு இருக்க இன்றைக்கு அதற்கும் ஒரு படி மேலாகப் போய் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து 6,960 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 55,680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே போன்று, வெள்ளியின் விலையும் ஏறுமுகத்தில் உள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் உயா்ந்து 98 ரூபாய்க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை 500 ரூபாய் உயர்ந்து 98,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தங்கத்தின் மீதான இறக்குமதி மற்றும் சுங்க வரியினைக் குறைத்ததை அடுத்து அன்று மாலையே தங்கத்தின் விலை குறைந்தது. அந்த வாரம் முழுமையும் குறைந்த தங்கத்தின் விலை அடுத்த வாரத்தில் அப்படியே நின்றது. அதற்குப் பிறகு தங்கத்தின் விலை விலை ஏறியும் இறங்கியும் வந்தன. இந்நிலையில் நேற்று சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்ததே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கிய நிலையில் இன்றைக்கு 600 ரூபாய் உயர்ந்திருப்பது கனத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் தங்கம் வாங்கத் தயங்கும் சூழல் உண்டாகியிருக்கிறது. சர்வதேச அளவில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாகவும் இனியும் உயர வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
What's Your Reaction?






