கோவையில் பிரதமரின் பேரணிக்கு அனுமதி! நிபந்தனைகளும் விதித்த சென்னை உயர்நீதிமன்றம்...
அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்திப்பதைத் தடுக்கக் கூடாது - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
கோவையில் வரும் 18-ம் தேதி பிரதமர் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிரதமர் மோடி சமீப காலமாக தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தருகிறார். அதன்படி இன்று (மார்ச் 15) தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர், கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் கேரளாவுக்குச் சென்றார். இந்நிலையில், வரும் 18-ம் தேதி மீண்டும் பிரதமர் தமிழ்நாடு வருகிறார். அப்போது கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட வாகன அணிவகுப்பு பேரணியில் அவர் பங்கேற்கிறார். 4 கி.மீ. தூரம் நடத்தப்படவுள்ள இப்பேரணியில், சுமார் 1 லட்சம் பேர் வரை பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று முதல் வரும் 19-ம் தேதி வரை கவுண்டம்பாளையம், துடியலூர், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ். புரம் ஆகிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாகன அணிவகுப்பு பேரணிக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, பிரதமர் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி தர காவல்துறை மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனை எதிர்த்து கோவை மாவட்ட பாஜக சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அப்போது, பொதுத் தேர்வு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும், மக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதாலும் வாகன பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வாகன பேரணி மாலை 5 மணிக்கு மேல் நடைபெற உள்ளதால் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றும், அரசியல் தலைவர்கள் மக்களைச் சந்திப்பதைத் தடுக்கக் கூடாது என்றும் கூறி பேரணிக்கு அனுமதி வழங்கினார். மேலும், பிரதமரின் பாதுகாப்புக்கு பிரச்னை ஏற்படாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுதாரருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
What's Your Reaction?