பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு- விடுதியை ஆய்வு செய்த அமைச்சர்

ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு செய்தார்.

Oct 14, 2024 - 17:17
பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் மனு- விடுதியை ஆய்வு செய்த அமைச்சர்

கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவின்போது விருதுநகரை சேர்ந்த பிரகாஷ் என்ற முனைவர் படிப்பு மாணவர், திடீரென தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில் விடுதியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதி முறையாக கையாளப்படுவதில்லை என புகார் தெரிவித்து இருந்தார்.

விடுதி கட்டணம் அதிகமாக இருப்பதுடன், முறையான பராமரிப்பு இல்லை எனவும் புகார் தெரிவித்து இருந்தார்.இதன்காரணமாக பட்டமளிப்பு விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மனுவை வாங்கிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவருக்கு உறுதி அளித்தார்.

இந்த நிலையில், கோவை பாரதியார் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவிற்கு பின்பு, பல்கலைக் கழக வளாகத்தில் அமைந்து உள்ள ஆராய்ச்சி பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் தங்கும் விடுதியை உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு செய்தார். பின்னர் விடுதி மாணவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது, அமைச்சர் கோ.வி.செழியனுடன் கூடுதல் தலைமைச் செயலாளர் கோபால் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர். மேலும் ஆய்வின் போது மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் ஆராய்ச்சி மாணவர் புகார் அளித்த நிலையில், உயர்கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow