அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா ? அரசு செயலாளர் சுற்றறிக்கையில் திடீர் பரபரப்பு
அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை செயலாளர் சுற்றறிக்கையால் திடீர் பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த சுற்றிக்கையில், ஆட்சியர்களிடம் முன்கூட்டியே அனுமதி பெற்றே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். விலங்கு வதை தடுப்புச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும். முன்கூட்டியே அறிவிப்பு வெளியிடாமல் எந்த போட்டியும் நடத்த ஒப்புதல் அளிக்கக் கூடாது.
விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் விதிகளில் குறிப்பிட்டுள்ளபடி காளைகள் மற்றும் கால்நடைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாத வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும். காளைகள் துன்புறுத்தப்படாமல் இருப்பதையும், பாதுகாப்பாக இருப்பதையும் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். உள்ளிட்டவைகளை மாவட்ட கலெக்டர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.
What's Your Reaction?

