கோவையில் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக புகைப்படம் - பாய்ந்தது வழக்கு
சபியுல்லா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் தூண்டப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை, குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா (41) என்பவர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்து இருந்ததற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.கோவை நகர போலீஸின் உளவுப் பிரிவு அதிகாரிகள் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்த நிலையில், சபியுல்லாவின் வாட்ஸ்அப் புரோஃபைல் படம் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆதரவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகுமாரி செல்வம் இது தொடர்பாக புகார் அளித்தார். இதையடுத்து, சபியுல்லா மீது பாரதிய நியாய சங்கிதா சட்டப் பிரிவு 113 - ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்தப் பிரிவின் கீழ், இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை, பாதுகாப்பு அல்லது பொருளாதார பாதுகாப்பை அச்சுறுத்தும் நோக்கில் செயல்படுவது, மக்களிடையே பயத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவது ஆகியவை தீவிரவாத செயல்களாக கருதப்படுகின்றன.
சபியுல்லா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளால் தூண்டப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கோவை நகர காவல் துறையின் உளவுப் பிரிவு மற்றும் சிறப்பு உளவுப் பிரிவு ஆகியவற்றின் கண்காணிப்பில் சபியுல்லா இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இந்த வழக்கை தற்பொழுது விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?