Kalki Box Office: ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கல்கி 2898 AD... பெருமூச்சு விட்ட பிரபாஸ்!
பிரபாஸ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான கல்கி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளது.
சென்னை: நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்த கல்கி திரைப்படம் கடந்த மாதம் 27ம் தேதி வெளியானது. பிரபாஸுடன் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ராஜமெளலி, துல்கர் சல்மான் உட்பட மேலும் சிலர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். சுமார் 600 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவான கல்கி படத்துக்கு மிகப் பெரியளவில் ப்ரோமோஷன் செய்யப்பட்டது. அதேபோல் கிராபிக்ஸ், மேக்கிங், சந்தோஷ் நாராயணனின் இசை ஆகியவையும் கல்கி 2898 ஏடி படத்துக்கு ஹைப் கொடுத்திருந்தது.
கடந்த மாதம் 27ம் தேதி பான் இந்திய மொழிகளில் வெளியான கல்கி, கலவையான விமர்சனங்களே பெற்றது. மகாபாரதத்தை பின்னணியாக வைத்து அதனை ஹைடெக்காக இயக்கியிருந்தார் நாக் அஸ்வின். கல்கி முதல் பாகத்தில் அமிதாப் பச்சனின் கேரக்டர் மட்டுமே ரசிக்கும்படியாக இருந்ததாகவும், பிரபாஸ், கமல்ஹாசன் இருவருமே கேமியோ போல வந்து போனதாக விமர்சித்திருந்தனர். ஆனால், இரண்டாம் பாகத்தில் தான் பிரபாஸ், கமல் இருவருக்கும் தான் அதிக காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், முதல் நாளில் 190 கோடி ரூபாய் வரை வசூலித்த கல்கி, அடுத்தடுத்த நாட்களிலும் கலெக்ஷனில் மாஸ் காட்டியது. முதல் 5 நாட்களிலேயே 500 கோடியை கடந்து சாதனை படைத்தது. ஆனாலும் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையுமா என சந்தேகம் இருந்தது. இந்த சூழலில் கல்கி திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் பிரபாஸ், இயக்குநர் நாக் அஸ்வின் ஆகியோர் நிம்மதி பெருமூச்சு விட்டிருப்பார்கள்.
பாகுபலிக்குப் பின்னர் பிரபாஸ் நடிப்பில் வெளியான சாஹோ, ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் படுதோல்வியடைந்தன. கடந்தாண்டு ரிலீஸான சலார் மட்டுமே பிரபாஸுக்கு கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்தது. அப்போதும் கூட சலார் ஆயிரம் கோடி வரை வசூலிக்கவில்லை. பாகுபலிக்குப் பின்னர் கல்கி திரைப்படம் மூலம் மீண்டும் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துள்ளார் பிரபாஸ். இதன்மூலம் ஷாருக்கானின் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார்.
அதாவது ஷாருக்கான் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களும், ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தன. அதேபோல் பிரபாஸும் பாகுபலி, கல்கி படங்களில் ஆயிரம் கோடி கலெக்ஷன் கொடுத்துள்ளார். அமீர்கானின் தங்கல் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கலெக்ஷன் செய்திருந்தது. கன்னட ஹீரோ யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் திரைப்படமும் ஆயிரம் கோடி கலெக்ஷன் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?