Indian2 Box Office: உலக நாயகனுக்கு வந்த சோதனையா இது..? பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கிய இந்தியன் 2!
கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது. முதல் நாளில் இருந்தே இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருவதால், பாக்ஸ் ஆபிஸ் வசூலும் படுமோசமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: ஷங்கர் இயக்கிய இந்தியன் 2ம் பாகம் பல தடைகளை கடந்து வெளியாகியுள்ளது. 1996ல் வெளியான கமல் – ஷங்கர் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகமாக இந்தியன் 2-வை தொடங்கினார் ஷங்கர். 2018ல் ஆரம்பித்த இந்தியன் 2ம் பாகத்துக்கு அடுத்தடுத்து பல சோதனைகள் வந்தன. பட்ஜெட் பிரச்சினை, ஷங்கருக்கும் லைகாவுக்கும் இடையே பஞ்சாயத்து, ஷூட்டிங் ஸ்பாட்டில் கிரேன் விபத்து, 3 பேர் உதவி இயக்குநர்கள் பலி, கொரோனா லாக் டவுன் என தட்டுத் தடுமாறினார் இந்தியன் தாத்தா.
விக்ரம் படத்தின் வெற்றியால் மீண்டும் இந்தியன் 2ம் பாகத்தை தொடங்கியது கமல் – ஷங்கர் காம்போ. அதுமட்டும் இல்லாமல் இப்படத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இணைந்ததால் படப்பிடிப்பும் வேகமாக முடிவுக்கு வந்தது. அதோடு இந்தியன் 2 படத்தை இரண்டு பாகமாக வெளியிடவுள்ளதாகவும் படக்குழு அறிவித்தது. இதனால் இந்த முறை இந்தியன் தாத்தா சம்பவங்கள் தாறுமாறாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அதோடு ஏஆர் ரஹ்மானை விட்டுவிட்டு ராக்ஸ்டார் அனிருத்தையும் களத்தில் இறக்கியிருந்தார் ஷங்கர்.
ஹைப் மேல் ஹைப் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ஷங்கர், இப்போது அனிருத் கம்போஸ் செய்த கதறல் பாடலுக்கு நியாயம் சேர்த்துவிட்டார். கதை, திரைக்கதை, மேக்கிங், கமலின் கெட்டப், அனிருத்தின் பாடல்கள், பிஜிஎம் என ஒட்டுமொத்தமாக சொதப்ப, இந்தியன் 2 டிசாஸ்டர் என்ற ஹேஷ்டேக் வைரலானது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி, முதல் நாளில் இருந்தே இந்தப் படத்துக்கு மிக மோசமான ஓபனிங் கிடைத்துள்ளது. முக்கியமாக இயக்குநர் ஷங்கரையும் அனிருத்தையும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள். படக்குழுவே எதிர்பாராத அளவிற்கு இந்தியன் 2 படுதோல்வி அடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது.
படம் முழுக்க ஊழலை பற்றி பேசுகிறார் இயக்குநர் ஷங்கர்; ஆனால், இந்தியன் இரண்டம் பாகமே மிகப் பெரிய ஊழல் தான் என ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, முதல் நாளில் இந்தியா முழுவதும் இந்தியன் 2 திரைப்படம் 25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம். சனிக்கிழமையான இரண்டாவது நாள் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலமை இன்னும் மோசமாக 18 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது.
இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை இந்தியன் 2 படத்துக்கு அதிகளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், மூன்றாவது நாளான நேற்று 15 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது இந்தியன் 2. இதனடிப்படையில் இத்திரைப்படம் மொத்தம் 58.9 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கமல் – ஷங்கர் என இரு ஜாம்பவான்கள் இணைந்தும் இந்தியன் 2 தோல்வியடைந்துள்ளது, கோலிவுட்டையே அதிர வைத்துள்ளது. இந்தாண்டின் மிகமோசமான டிசாஸ்டர் இந்தியன் 2 எனவும் சினிமா ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர். அதேநேரம், இதுவரை இந்தியன் 2 பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?