சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயர்த்தப்பட்ட சொத்து வரி

சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 6 சதவீதம் வரை உயர்த்துவது குறித்த தீர்மானம் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Sep 27, 2024 - 16:20
சென்னை மாநகராட்சியில் மீண்டும் உயர்த்தப்பட்ட சொத்து வரி
chennai corporation

சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி உள்ளாட்சி அமைப்புகளில், உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரியை உயர்த்த அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி 2022 - 23ம் நிதியாண்டில் உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டது. அப்போது, 600 சதுரடிக்கு குறைவான குடியிருப்புகளுக்கு 25 சதவீதமும் 601 - 1,200 சதுரடி வரை என்றால் 50 சதவீதமும் சொத்து வரி உயர்த்தப்பட்டது.

மேலும், 1,201 - 1,800 சதுரடி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 75 சதவீதமும் 1,800 சதுரடிக்கு மேலாக இருந்தால், 100 சதவீதமும் சொத்து வரி உயர்ந்தது. அதேபோல, வணிக பயன்பாட்டு கட்டடங்களுக்கு 100 சதவீதமும் தொழிற்சாலை, கல்வி நிலையப் பயன்பாட்டுக் கட்டடங்களுக்கு 75 சதவீதமும் உயர்த்தப்பட்டது.

சென்னை மாநகராட்சியில் பிரதான பகுதிகளில், வணிகப் பயன்பாட்டுக்கு, 150 சதவீதமும், தொழிற்சாலை மற்றும் கல்வி நிலையக் கட்டடங்களுக்கு, 100 சதவீதமும் உயர்த்தப்பட்டது. சொத்து வரி உயர்வுக்காக வெளியிடப்பட்ட அரசாணையில் 15வது நிதி ஆணையப் பரிந்துரைப்படி, ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி உயர்த்தப்படும் என, தமிழக அரசு அரசாணையும் வெளியிட்டது. 

இந்நிலையில் 2025- 26ம் நிதியாண்டில் சொத்து வரியை, 6 சதவீதம் உயர்த்த, நகராட்சி நிர்வாகத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரி உயர்கிறது. இந்த சொத்து வரி உயர்வு என்பது சொத்துகளின் அளவு மற்றும் மண்டலங்களை பொறுத்து வேறுபடக்கூடியது.  சென்னையை எடுத்து கொண்டால் கடந்த ஆண்டு குடியிருப்புகளுக்கான சொத்து வரி என்பது 50 சதவீத்தில் இருந்து 150 சதவீதம் உயர்த்தப்பட்டது. இடம், கட்டத்தின் அளவைப் பொறுத்து மக்களுக்கான சொத்து வரியில் வித்தியாசம் இருந்தது. 

முன்னதாக சொத்து வரி உயர்த்துவது தொடர்பாக உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து இயக்குநர் சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பிக்கபட்டது. அதன்படி சென்னை மாநகராட்சியில் 6 சதவீதம் சொத்து வரியினை உயர்த்தி  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow