தமிழகத்தில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்.. வாகன ஓட்டிகள் நிம்மதி

தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

Apr 1, 2024 - 08:43
Apr 1, 2024 - 15:31
தமிழகத்தில் 7 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு வாபஸ்.. வாகன ஓட்டிகள் நிம்மதி

நாடு முழுவதும் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரம் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மொத்தம் 54 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகள் உட்பட தமிழ்நாட்டில் 7 சுங்கச்சாவடிகளில் இன்று சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இமைக்க ரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி உள்ளிட்ட 5சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது. இதைதொடர்ந்து பரனூர், ஆத்தூர் என மொத்தம் 7 சுங்கச்சாவடிகளுக்கு சேர்த்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்ப வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் ரூ.20 உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வில் பரனூர், ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் மாற்றம் இருக்கிறது. அதன்படி, ஒரு வழி பயணம் மற்றும் அதே நாளில் திரும்பும் பயணத்திற்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 

ஏற்கனவே சுங்கக்கட்டணத்தை குறைக்க வாகனஓட்டிகள் வலியுறுத்தி வரும் சூழலில் இந்த கட்டண உயர்வு மேலும் சுமை என அவர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
இந்த கட்டண உயர்வு அறிவிப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திரும்பப் பெற்றது.

இது தொடர்பான உத்தரவு அனைத்து திட்ட இயக்குநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வந்த நிலையில், தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow