ஓராண்டிற்குள் 13 பரதநாட்டிய அரங்கேற்றங்கள்- வியப்பில் ஆழ்த்தும் ஜெயஸ்ரீ நாராயணன்!

சங்கீத நாடக அகாதமி சார்பில் கடகர் விருதினை வென்றவரும், பரதநாட்டியத்தில் கற்பனைக்கும் எட்டாத வகையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஜெயஸ்ரீ நாராயணன் குறித்த சிறப்பு கட்டுரை.

ஓராண்டிற்குள் 13 பரதநாட்டிய அரங்கேற்றங்கள்- வியப்பில் ஆழ்த்தும் ஜெயஸ்ரீ நாராயணன்!
puducherry jayashree narayanan: a legacy in bharatanatyam and education

புதுச்சேரியைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன், எண்ணற்ற சாதனைகளுக்குச் சொந்தக்காரர். இவருடைய குடும்பமே இசை மற்றும் கலைப் பின்னணிக் கொண்டது. 1950-ம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்த இவர், மிக இளம்வயதிலேயே தகுதி வாய்ந்த சிறந்த குருக்களிடம் முறையாக பரதநாட்டியம் பயின்றவர். ஏப்ரல் 2023 முதல் பிப்ரவரி 2024 வரையிலான காலகட்டத்தில், 13 மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றங்களை நடத்தி, 'கிராண்ட் மாஸ்டர்’ பட்டம் பெற்றுள்ளார்.

சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்ற ஜெயஸ்ரீ, கலாக்ஷேத்ராவில் ஃபர்ஸ்ட் கிளாஸ் பட்டயத்தை (5 ஆண்டுகள்) பரதநாட்டியத்துக்காகப் பெற்றுள்ளார். கலாக்ஷேத்ரா டிஸ்டிங்ஷன் முதுநிலைப் பட்டயம் (2 ஆண்டுகள்) மற்றும் கலாக்ஷேத்ராவின் அட்வான்ஸ்டு ஸ்டடி ஆன் கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியா சீனியர் ஸ்காலர்ஷிப் (2 1/2 ஆண்டுகள்) ஆகியனவும் இவருக்குப் பெருமை சேர்க்கின்றன.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 'பாரதியார் பல்கலைக்கூடம்' என்ற அமைப்பின் பொறுப்பு முதல்வர் மற்றும் நடனத்துறைத் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார். இளங்கலை நடனத் தேர்வு மற்றும் முதுகலை நடனத் தேர்வு ஆகியவற்றுக்குக் கேள்வித்தாள் தயாரிக்கும் பணி, ஸ்டேட் லெவல் எலிஜிபிலிடி டெஸ்ட் தேர்வின் பொறுப்பாளர் பணியிலும் சிறப்பாகச் செயலாற்றியிருக்கிறார்.

கலாக்ஷேத்ரா, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பெங்களூரு பல்கலைக்கழகம் ஆகியவற்றில் செய்முறைத் தேர்வுகளின் மதிப்பீட்டாளர், ஜூனியர் நிலை நடன மாணாக்கருக்கான Centre for Cultural Resources and Training (CCRT) அமைப்புப் பாடங்களுக்கானப் பாடத் திட்டத்தை வகுக்கும் பொறுப்பு, 'சலங்கை ஸ்கூல் ஆஃப் டான்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர், 'பைரவி கர்னாடிக் மியூஸிக் சர்க்கின்' என்ற அமைப்பின் ஆலோசனை உறுப்பினர், ஆல் இண்டியா ரேடியோவின் மெல்லிசைத் தேர்வுக் குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பணிகளைச் செய்திருக்கிறார்.

'சிங்கப்பூர் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி' என்ற அமைப்பின் சார்பில் 2005-ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில் தேர்வாளராகச் செயல்பட்டிருக்கிறார். 'ஆல் இண்டியா ரேடியோ'வில் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் பணியாற்றியதோடு, புதுச்சேரி வானொலி நிலையத்தில் 'B' H1 Drama artists ஆகவும் இருந்திருக்கிறார். கலாக்ஷேத்ரா குழுவினருடன் இந்தியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் நாட்டிய நாடகங்களை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்.

பாரதிதாசனின் படைப்புகளுக்கு நாட்டிய வடிவம்:

பாரதிதாசனின் புகழ்பெற்ற படைப்பான 'குடும்ப விளக்கு' என்பதை முழுநீள நாட்டிய நாடக வடிவம் ஆக்கியிருக்கிறார். காடுகளின் மேன்மையைப் பேசும், 'வன மஹோத்ஸவம்' நாட்டிய நாடகமானது இவருடைய கிரீடத்தில் பொருந்திய இன்னொரு வைரக்கல்.

பாரதிதாசனின் 'ஒன்பது சுவைகள்', கம்பராமாயணத்தின் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்ட 'கைகேகியின் மனமாற்றும், 'மாரீச வதம்', 'குற்றாலக் குறவஞ்சி’ உள்ளிட்டவை இவருடைய கைவண்ணத்தில் மிளிர்ந்த நாட்டிய நாடகங்களில் குறிப்பிடத் தகுந்தனவாகும். இசை மற்றும் நடனத்தோடு தொடர்புடைய பல அலாரிப்புகள், வர்ணங்கள், பதங்கள் மற்றும் தில்லானாக்கள் ஆகியவற்றை உருவாக்கியிருக்கிறார். 'தமிழ்நாடு கிராமியக் கலைகள்' (Folk Arts of Tamilnadu) என்ற புத்தகத்தின் இணை ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார்.

இவர் பெற்றிருக்கும் விருதுகள் மற்றும் பட்டங்களின் பட்டியலும் நீளமானது. 2003-ம் ஆண்டு யோகாஞ்சலி நாட்டியாலயா' வழங்கிய 'நாட்டிய சிரோமணி விருது, 1997-ம் ஆண்டு புதுவை அரசால் வழங்கப்பட்ட 'புதுவை கலைமாமணி' விருது, ஆந்திரப் பிரதேச அரசு வழங்கிய 'நாட்டிய ரத்னா விருது’, 1995-ம் ஆண்டு புதுச்சேரி 'கலைமகள் சபா'வால் வழங்கப்பட்ட 'சிறந்த பரதநாட்டிய குரு விருது’, அதே ஆண்டில் புதுச்சேரி ஜூனியர் சேம்பரால் வழங்கப்பட்ட 'அவுட் ஸ்டேண்டிங் யங் பர்சன்' விருது, சங்கீத லய ஸ்ருகி அமைப்பால் வழங்கப்பட்ட 'இசை ஞானச்சுடர்' விருது. 1971-ம் ஆண்டு சங்கீத நாடக அகாதமி வழங்கிய 'கடகர் விருது’ உள்ளிட்டவை இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளில் முக்கியமானவையாகும்!

(கட்டுரையாளர்: ஆர்.லதா/ குமுதல் சிநேகிதி / 24.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow