நீட் விலக்கு அரசியல்: அஞ்சலி செலுத்தும் அதிமுக… தீர்மான அரசியல் திமுக

நீட் விலக்கைப் பொறுத்தவரை திட்டங்கள், தீர்மானங்கள் மூலமாக திமுகவும், அஞ்சலி செலுத்தும் அரசியல் மூலமாக அதிமுகவும் ஆடும் ஆட்டம் தான் 2026-யிலும்.

Apr 19, 2025 - 17:37
நீட் விலக்கு அரசியல்: அஞ்சலி செலுத்தும் அதிமுக… தீர்மான அரசியல் திமுக
நீட் விலக்கு அரசியல்: அஞ்சலி செலுத்தும் அதிமுக… தீர்மான அரசியல் திமுக

தமிழ்நாட்டு அரசியலில் தவிர்க்க முடியாத பேசுபொருள்கள் பட்டியலில், அண்மைக்காலமாக நீட் தேர்வுக்கு நீங்காத இடம் அமைந்துவிட்டது. நீட் தேர்வை ஒழிப்போம் என்பது தேர்தல் அறிக்கைகளிலும், கல்வி மாநிலப்பட்டியலில் இல்லை என்பது தலைவர்களின் தனி விளக்க அறிக்கைகளிலும் மாறி மாறி வருவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தச் சூழலில்தான் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் வரப்போகிறது. இதிலும் நீட் தேர்வு அரசியல் மிகப்பெரும் இடம்பிடிக்கும். 

ஆனால், வழக்கமான நேரடி நீட் எதிர்ப்பு பிரசாரமாக இருதரப்பிலும் அமைவதற்கான வாய்ப்பு கிடையாது. திமுக சட்டப்பூர்வ துணை ஆவணங்களைத் தயார்செய்து விட்டோம். இந்த முறை வெற்றி நமதே என்ற முழக்கத்துடன் அண்மைக்கால உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பிரசாரம் செய்யும். 

அதிமுகவுக்கு இந்த முறை நீட் ஒழிப்பு என்று பேசுவதற்கான வாய்ப்பு கிடையாது. ஆனால், நீட் அரசியலில் பங்கேற்கத்தான் வேண்டும். எனவே, “நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக திமுக அறிவித்தது என்ன? ஆனால் நடந்தது என்ன? மக்களை ஏமாற்றிவிட்டார்கள்” என்று பிரசாரம் செய்யும். அதற்கான வேலைகளையும் அதிமுக தொடங்கிவிட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான், இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது அஇஅதிமுக.

NEET நுழைவுத் தேர்வு: தேர்தலுக்கு தயாராகும் அஇஅதிமுக

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “NEET நுழைவுத் தேர்வை ஆட்சிக்கு வந்தவுடன் ரத்து செய்வோம் என்று பொய்கூறி ஆட்சிக்கு வந்த விடியா திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசால் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி, திமுக அரசை கண்டித்து அ.இ.அதிமுக மாணவரணி சார்பில் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.04.2025) மாலை 5.30 மணி  அளவில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து வருவாய் தலைநகரங்களிலும் நடைபெறுகிறது.” 

அப்படியானால், திமுக ஏமாற்றிவிட்டது என்ற கண்டனக்குரல் போலவே அதிமுகவால் இதைச் செய்து முடிக்க முடியுமா என்ற கேள்வியும் எழும்போது, அதிமுக என்ன பதில் சொல்லும் என்பது சிந்தனைக்குரியது. சொல்லப்போனால், இந்த ஆர்ப்பாட்ட விளையாட்டை ஆட்சியில் இருந்தபடியே திமுகவும் செய்துள்ளது. ஆனால், இப்போது அதற்கு இடமில்லை.

கடந்த 2023ஆம் ஆண்டு ( ஆட்சியில் இருந்துகொண்டே ),  நீட் தேர்வுக்கு எதிராக இந்திய அரசு மற்றும் ஆளுநரை கண்டித்து ஆகஸ்ட் 20ஆம் தேதி, திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில் தமிழகம் முழுக்க உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தது.

இது தொடர்பாக திமுக அணிகள் சேர்ந்து வெளியிட்ட கூட்டறிக்கையில்: “தமிழக மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. நீட் தேர்வு மரணங்களுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசும், அவர்களுக்கு அடிமைச்சேவகம் செய்யும் அதிமுகவினரும், நீட் பாதுகாவலர் ஆளுநர் ஆர்.என்.ரவியுமே காரணம்.” என்று தெரிவித்திருந்தது. 

ஏனெனில், ஆட்சிக்கு வந்ததும் “முதல் கையெழுத்து நீட் விலக்குதான்” என்றும் “இரகசிய திட்டம் வைத்துள்ளோம்” என்றும் பிரசாரம் செய்து வென்ற திமுகவுக்கு நீட் விவகாரம் இந்த தேர்தலில் பின்னடவைத் தரும் அம்சம் தான்.

திமுகவுக்கு நெருக்கடி- சமாளிக்கப்போவது எப்படி?

தேர்தல் நெருங்கிவிட்ட இந்தச் சூழலில், குறைந்தபட்சம் என்ன செய்துள்ளோம் என்றாவது பேச வேண்டிய இடத்தில் இருக்கிறது திமுக. அதுதான் வரப்போகும் தேர்தலில் நீட் அரசியலில் திமுகவின் உத்தியாக இருக்க முடியும். வெறுமனே நீட் விலக்கு கேட்டால் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, 2007ஆம் ஆண்டு உள் ஒதுக்கீட்டூக்கு கையாணட உத்தி போலவே ஆணைய அறிக்கை ஒன்றைத் தயார் செய்து அதன் அடிப்படையில் விலக்குக் கோரி வழக்குப் போடுவதுதான் எங்கள் ரகசிய திட்டம். அதற்காகவே ஏ.கே.ராஜன் ஆணைய அறிக்கை செய்யப்பட்டது என்று திமுக பிரச்சாரத்தை தொடங்கிவிடும்.

அதேசமயம், நீட் விலக்கை மாநில அரசுகள் செய்ய முடியாது. இந்திய அரசுதான் செய்ய முடியும் என்பது 2021 தேர்தலுக்கு முன்பே எங்களுக்கு தெரியும் என்று கடந்த ஜனவரியில் முதல்வர் சட்டப்பேரவையில் பேசியதும், ஏப்ரல் 9 ஆம் தேதி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் நீட் விலக்குக்கு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம் நிறைவேற்றியதும் திமுகவின் 2025 ஆம் ஆண்டு அரசியலில் கவனிக்கத்தக்க மென்முரண்கள்.  

இப்படியாக, நீட் விலக்கைப் பொறுத்தவரை திட்டங்கள், தீர்மானங்கள் மூலமாக திமுகவும், அஞ்சலி செலுத்தும் அரசியல் மூலமாக அதிமுகவும் ஆடும் ஆட்டம் தான் 2026-இலும்.

மொத்தத்தில், பொதுப்பட்டியலில் உள்ளது கல்வி. மாநில அரசு மட்டும் முடிவெடுக்க இயலாதென்று மீண்டும் மீண்டும் சொல்வதானால் தேர்தல் அறிக்கைகளில் சொல்வதற்கு முன்பும் கூட, கல்வி மாநிலப்பட்டியலில் தானே இருந்தது என்பதுதான் மாநில அரசியல் தலைவர்களுக்கு மக்கள் வைக்கும் மில்லியன் டாலர் கேள்வி.

-குட்டிக்குத்தூசி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow