Narivetta: ஓடிடியில் வெளியாகியுள்ள 'நரிவேட்டா'.. படம் எப்படியிருக்கிறது?

கேரளாவில் பழங்குடியின மக்கள் தங்கள் உரிமைக்காக நடத்திய போராட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள நரிவேட்டா திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில், படம் குறித்து குமுதம் இதழுக்காக கரிகாலன் எழுதியுள்ள விமர்சனம்.

Narivetta: ஓடிடியில் வெளியாகியுள்ள 'நரிவேட்டா'.. படம் எப்படியிருக்கிறது?
narivetta movie after ott review in tamil

சோனி லைவ் ஓடிடியில் கடந்த வாரம் வெளியாகியுள்ள மலையாளத் திரைப்படம் ‘நரிவேட்டா’. வருகிற 2026-க்குள் நக்சலிசத்தை ஒழிக்க இலக்கு வைத்துள்ளது, மத்திய அரசு. இதன் பொருட்டு “operation Kagar" எனும் பெயரில் ஆயிரக்கணக்கான ராணுவ மற்றும் துணை ராணுவப் படையினரை இந்திய வனப்பகுதிக்குள் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது மத்திய அரசு.

ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் போன்றவை காடுகள் நிறைந்த மாநிலங்கள். இங்கு இரும்புத் தாது, நிலக்கரி, செம்பு, அபாடைட், இரும்பு சுண்ணாம்பு, பாக்சைட் போன்ற கனிம வளங்கள் கிடைக்கின்றன. இவற்றைத் தனியார் முதலாளிகள் கொள்ளையடிக்க வசதியாக உருவாக்கப்பட்டதுதான் 'ஆபரேஷன் காகர்'.

பழங்குடியின மக்களின் அரசியல்:

'மாவோயிஸ்ட்டுகள் வேட்டை' என்கிற பெயரில், காடுகளைவிட்டுப் பழங்குடிகளை அப்புறப்படுத்துவதையே நக்ஸல் ஒழிப்பு என்கிறார்கள். 'நரி வேட்டா'வும் இப்படிப்பட்ட ஒரு கதைதான். திரைப்படங்களில் அரசியல் உள்ளடக்கங்கள் கூடிய படங்கள் வருவது அரிது. அப்படியே வந்தாலும் அவை வலதுசாரிகளுக்கு ஆதரவானவையாகவே இருக்கும். ஆனால், 'நரிவேட்டா' பழங்குடி மக்களுக்கு ஆதரவான அரசியலை பேசியிருக்கிறது.

'நரிவேட்டா' உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதை-வயநாட்டின் சீயம்பத்தில் உள்ள காப்புக் காட்டில் பழங்குடி நலனை விரும்பும் சி.கே.சாந்தி தலைமையில், பழங்குடிகளுக்கும் காவல்துறைக்கும் நடந்த போராட்டத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.

கேரளாவில் உள்ள பழங்குடிகள் வசிக்கும் கிராமம் முத்தங்கா. இம்மக்களுக்கு அரசியல்வாதிகள் வாக்குறுதியளித்தபடி நிலம் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. 2003ம் ஆண்டு போராட்டம் வெடித்தது. இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட போலீஸ் நடவடிக்கை மற்றும் அதன் பின்விளைவுகளை எதிர்த்து பழங்குடி மக்கள் நடத்திய போராட்டத்தைதான் 'நரிவேட்டா' என்கிற திரைப்படம் ஆக்கி இருக்கிறார்கள்.

கேரள சாகித்ய அகாடமியின் யுவபுரஸ்கார் விருது பெற்ற அபின் ஜோசப்பின் கதையில் அரசியல் அனல் பறக்கிறது. பழங்குடிகளின் போராட்டத்தை குலைக்கத் தந்திரம் செய்கிறது போலீஸ். தலைமைக் காவலரான பஷீர் அகமதுவை (சுராஜ் வெஞ் சாரமூடு) போலீஸ்காரர்களே கொன்று, பழியைப் மாவோயிஸ்ட்டுகள் மற்றும் பழங்குடிகள் மீது போடுகிறார்கள். பஷீர் மீது அன்பு கொண்ட சக போலீஸ்காரரான வர்கீஸ் பீட்டருக்கு (டோவினோ தாமஸ்) இது தெரியவருகிறது. டிஐஜி கேசவதாஸிடம் (சேரன்) நியாயம் கேட்கிறான். அப்போது, பஷீரை கொல்லச் சொன்னதே டி.ஐ.ஜிதான் என்பது வர்கீஸுக்குத் தெரியவருகிறது.

தொடர்ந்து நிகழும் வன்முறையில் வர்கீஸின் துப்பாக்கியால் பழங்குடி இளைஞனொருவன் சுடப்படுகிறான். வர்கீஸ் கைதா கிறான். போலீஸ் அத்துமீறல்களுக்கு ஆதரவாகச் செயல்படுமாறு சித்ரவதை செய்கிறார்கள்.

'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி’ நூலின் கதையையும் படம் ஞாபகமூட்டுகிறது. ராமச்சந்திரன் நாயர் எழுபதுகளில் கேரளாவில் போலீஸ்காரராக பணியாற்றியவர். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, தான் நிகழ்த்திய மோதல் கொலை குறித்து, அவர் அளித்த வாக்குமூலமே இந்நூல். ஆனால், இதில் வர்கீஸ் தவறு ஏதும் செய்யவில்லை.

மக்களுக்கு ஆதரவாக, நேர்மைக்கு ஆதரவாக அதிகாரத்தோடு மோதினால் என்ன நடக்கும்? நெஞ்சு பதைக்கும்படி சொல்கிறார், இயக்குநர் அனுராஜ் மனோகர். நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை, அதன் வளங்களை, அதைப் பாதுகாக்கும் பழங்குடிகளை நேசிக்கும் மனசை இப்படம் உருவாக்குகிறது. காலத்தின் தேவையாக வந்திருக்கிற படைப்பு “நரிவேட்டா”.

(கட்டுரையாளர்: கரிகாலன் / குமுதம் / 23.07.2025)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow