புயலைக் கிளப்பும் புதுச்சேரி இடைத்தேர்தல்...மோதும் ரங்கசாமி - நேரு!
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணி நகர்வுகள் மற்றும் வேட்பாளர் தேர்வுகள் புதுச்சேரி அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழகத்தைப் போலவே புதுச்சேரி, தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் போட்டியும் கடுமையாக சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. என்.ஆர்.காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணி VS காங்கிரஸ் -தி.மு.க கூட்டணி என்று இருந்த களத்தில், இடையே புகுந்த இந்திய கம்யூனிஸ்ட், த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க முஸ்தீபு காட்டி வருவதும், அதன் பின்னணியில் முதலமைச்சர் ரங்கசாமியின் சித்து விளையாட்டு இருப்பதாகவும் தகவல்கள் றெக்கைக் கட்டுவதுதான் புதுச்சேரியின் புயல் கச்சேரி!
இதுகுறித்து புதுச்சேரி அரசியல் பார்வையாளர்கள் சிலரிடம் பேசினோம். "புதுச்சேரி முதலமைச்சர் என் ரங்கசாமி எப்போதெல்லாம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறாரோ அப்போதெல்லாம் அவர் முதலமைச்சராக பதவியேற்கிறார். இந்த சென்டிமென்ட் காரணமாகவே 2026 சட்டமன்றத் தேர்தலிலும் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி என இரண்டு தொகுதிகளில் அவர் போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலுமே வென்றார். மங்கலத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் தட்டாஞ்சாவடி தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
அது முதலே இந்தத் தொகுதி முதலமைச்சர் ராஜினாமா செய்த தொகுதி என்பதால் யார் இங்கே போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ரங்கசாமியின் பள்ளிகாலத்தோழரும், முன்னாள் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரும், ஆதித்யா கல்விக் குழுமத்தின் தலைவருமான ஆனந்தின் மகன் அசோக் ஆனந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இவர் ஏற்கெனவே இரண்டுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஆனால், இவரின் தந்தை மற்றும் இவர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற குற்றவாளியாக அறிவிக்கப்படவே அவர் தேர்தலில் நிற்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு அசோக் ஆனந்த் மற்றும் அவரின் தந்தை மீது கீழமை நீதிமன்றம் கொடுத்த தண்டனை ரத்தானது. இதனால் களம் மாறத் தொடங்கியது.
பிரசாரத்தின்போதே ஆனந்த் தான் வேட்பாளர் என்று ரங்கசாமி பிரசார வியூகத்தை வகுத்து மக்கள் மனதில் பதியவைத்திருந்தார். அதிரடி திருப்பமாக, சுயேட்சை எம்.எல்.ஏ.வாக இருந்து, நேயம் மக்கள் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து த.வெ.கவுடன் கூட்டணியிட்டு போட்டியிட்ட நேருவின் மைத்துனர் விநாயகம் அந்த தேர்தலில் 5,583 வாக்குகள் வாங்கி இரண்டாமிடம் பிடித்தார்.
வினாயகத்துக்கு இந்த தொகுதியில் வரும் புதுப்பேட்டை பகுதிதான் பூர்வீகம் இதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்ததை யாரும் கவனிக்கவில்லை. அதனால் முதலமைச்சர் வேட்பாளர் ரங்கசாமிக்கே டஃப் ஃபைட் கொடுத்தார். காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் வைத்தியலிங்கம் 2990 வாக்குகள் வாங்கி நான்காமிடம் பிடித்து டெபாசிட்டை இழந்த நிலையில் விநாயகம் பெற்ற வாக்குகள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைத்தது. சுயேட்சையாகப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் துணைச் செயலாளர் சேது செல்வமும் 3,984 வாக்குகள் வாங்கி மூன்றாமிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக நேயம் மக்கள் கட்சியை ஆரம்பிப்பதற்கு முன்பே சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு கடந்த 2021 மற்றும் 2026 தேர்தல்களின்போது, காங்கிரஸில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள் இவர் கட்சிக்குள் வருவதை விரும்பாததால் அவரை சுயேட்சையாக போட்டியிட தள்ளிவிட்டார்கள். இந்த நிலையில் தான் தற்போது நேருவை அணுகிய காங்கிரஸின் அகில இந்திய நிர்வாகிகள், 'தற்போது உங்கள் கட்சியை காங்கிரசோடு நம்பி இணையுங்கள் என்று அழைத்துள்ளதாக தகவல் வருகிறது.
மேலும், தட்டாஞ் சாவடி தொகுதி பெரும்பான்மை மக்கள் வன்னியர்கள். என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரான அசோக் ஆனந்தன் யாதவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். என்னதான், அவருக்கு ஆதரவு தரும் முதலமைச்சர் ரங்கசாமி வன்னியர் என்றாலும், களத்தில் வன்னியரான நேருவின் மைத்துனரான விநாயகமே போட்டியிட்டால் அவருக்கே களம் அதிக சாதகமாக இருக்கும்.
இதுபோன்ற காரணங்களால் கடந்த தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த வினாயகத்துடன் இணையும் போது இடைத்தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது என காங்கிரஸ் கணக்கு போடுகிறது.
இதற்கிடையே, தனித்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சலீமுக்கு ஆதரவு கேட்டு, புதுச்சேரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கடந்த செப்டம்பர் 10ம் தேதி சென்னையில் தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான புஸ்ஸி ஆனந்தை சந்தித்தனர். இது யதார்த்தமாக நடந்த சந்திப்பு என வெளியில் சொல்லப்பட்டாலும் இதன் பின்னணியில் ரங்கசாமி இருக்கிறார் என்றும், இதன்மூலம் எதிரணிகளை பலவீனப்படுத்தி தங்களுடைய கூட்டணியை எளிதில் வெற்றி அடையச் செய்ய அவர் நினைக்கிறார் என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
திமுகவிலோ மாநிலச் செயலாளர் சிவா போட்டியிட நினைத்தார். ஆனால் இது வன்னியர்கள் நிறைந்த தொகுதி என்பதால் அவர் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் டாக்டர் ரித்திஷை போட்டியிட அழைத்தார்.
ஆனால் உங்கள் சங்காத்தமே வேண்டாம் என்று தனது தந்தை உடல்நிலை சரியில்லை என்று அமைதியாகிவிட்டார். இதனால் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் வன்னியரான சேது செல்வத்தை திமுகவுக்கு அழைத்து, அவரை திடீர் வேட்பாளராக அறிவித்து செப்டம்பர் 10ம் தேதி அமாவாசை அன்று ஜெகத்ரட்சகன் முன்னிலையில் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். எது எப்படியோ, தட்டாஞ் சாவடி இடைத்தேர்தல் களம் ரங்கசாமி நேரு இடையேதான் டஃப் ஃபைட்டாக இருக்கும்" என்று சொல்லி முடித்தார்கள்.
பார்ப்போம்!
(குமுதம் செய்திகளுக்காக பி.கோவிந்தராஜு)
What's Your Reaction?

