சேகர்பாபு மீது அடுக்கடுக்கான புகார்கள்… திமுக தோல்விக்கு காரணம் என்ன? லீக்கான ஆய்வு ரிப்போர்ட்.!

சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்விக்கு காரணம் என்ன? எதனால் ஆளுங்கட்சியாக இருந்தவர்கள் தோற்றுப்போனார்கள்? என்பது குறித்து திமுக தலைமையிடம் அக்கட்சியின் தேர்தல் கள ஆய்வுக் குழு சமர்பித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சேகர்பாபு மீது அடுக்கடுக்கான புகார்கள்… திமுக தோல்விக்கு காரணம் என்ன? லீக்கான ஆய்வு ரிப்போர்ட்.!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக தோல்வியை தழுவியது. குறிப்பாக கொளத்தூர் தொகுதியில் அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தோற்றுப்போனது திமுக உடன்பிறப்புகளை மட்டுமல்ல, அரசியல் களத்தையே அதிர்ச்சிக்குள்ளாகியது.

அதுமட்டுமா? உதயநிதி மற்றும் சேகர்பாபுவைத் தவிர்த்து திமுக அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்றார்கள். திமுகவின் கோட்டை என்று கருதப்பட்ட சென்னை, அவர்களின் கைவிட்டுச் சென்றது. இப்படி அடுத்தடுத்து பல அதிர்ச்சி வைத்தியத்தை திமுகவிற்கு தந்தது இந்த தேர்தல். 

இதனால் செம்ம அப்செட்டான திமுக தலைமை, எங்கே கோட்டையை கோட்டைவிட்டோம்? யார் யார் உள்ளடி வேலை செய்தனர்? கழகத்திற்குள் இருக்கும் கருப்பு ஆடு யார்? என இன்ச் பை இன்ச் டீட்டெயில்டு ரிப்போர்ட்டை கேட்டது. அதற்காக தேர்தல் கள ஆய்வு குழு என்று 36 பேர் கொண்ட 19 குழுவை உருவாக்கியது.

அதன்படி திமுக கள ஆய்வுக் குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து மாவட்டம், ஒன்றியம், நகரச் செயலாளர்கள், வேட்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தன.

இதனைத் தொடர்ந்து, தயாரிக்கப்பட்ட அறிக்கையை கள ஆய்வுக் குழுவினர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஜுன் 10 ஆம் தேதி சமர்ப்பித்தனர். சில குழுக்கள் ஜூன் 12 வரை நேரம் கேட்டுள்ளனர். 

இந்த நிலையில், திமுகவின் இந்த தேர்தல் கள ஆய்வுக் குழுவினர் தயாரித்துள்ள அறிக்கையில் உள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதாவது, மகளிர் உரிமைத் தொகை போதுமான எண்ணிக்கையில் கொடுக்காததால் மகளிரிடம் அவநம்பிக்கை ஏற்பட்டதாகவும், மக்கள் குறைகளை அமைச்சர்களிடம் கொண்டு செல்ல உதவியாளர்கள் முட்டுக்கடையாக இருந்த்தாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக்க் கூறப்படுகிறது.

மேலும், மகளிரிடையே விஜய்க்கு இருந்த செல்வாக்கை எடுத்துக் கூறினால் மாவட்ட நிர்வாகிகள் கண்டுக்கொள்ளாமல், பணம் அடிப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர் என்றும், இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமல் சீனியர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்ட்து என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாம். அரசில் தற்காலிக நியமன பொறுப்புகளில் கட்சியினருக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பாக இந்த அறிக்கையில், சீனியர்கள் மீது புகார்கள் கொட்டிக் கிடக்க, அதில் முன்னாள் அமைச்சரும் துறைமுகத் தொகுதி எம்.எல்.ஏவுமான சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கோவில் அறங்காவலர் குழுவில் சேகர்பாபுவுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே பொறுப்பு வழங்கியதாகவும், அதிமுகவில் இருந்து வந்தோருக்கு அறநிலையத் துறையில் பொறுப்பு வழங்கியதாகவும் அறிக்கையில் புகாராக இருந்துள்ளது.  

ஏற்கனவே, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றுப்போனதற்கு சேகர்பாபு தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ பரந்தாமன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சேகர்பாபு மீது குற்றஞ்சாட்டினார். அதில், ஆனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட தலைவரின் தொகுதியை கவனிக்கத்தவறியவர் மீது தயவு தாட்சன்யம் இன்றி தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்தால் தான் உண்மை திமுக தொண்டன் நிம்மதியாய் இருப்பான். தலைவர் தோல்விக்கு காரணமானவர் எப்படி கொஞ்சமும் வெட்கம், பயம், அச்சம், கூச்சம் எதுவும் இல்லாமல் தலைவர் முன்பு வந்து முகத்தைக்காட்டி நிற்கிறார்? நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொன்னது இதைத்தானா சேகர்பாபு என பரந்தாமன் கேள்வி எழுப்பினார். இதே போல சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பரிதி இளம் சுருதியும், சேகர்பாபு தான் ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என சமூகவலைதளத்தில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தேர்தல் கள ஆய்வுக் குழுவிலும் சேகர்பாபு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால், திமுக தலைமை என்ன முடிவு எடுக்கப்போகிறது என்று அறிவாலயத்தை உற்றுநோக்குகின்றனர் உடன்பிறப்புகள்.

இது ஒருபுறம் இருக்க, தொகுதிவாரியாக பதிவு செய்யப்பட்ட முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகள் தொடர்பான அதிருப்தி.. கூட்டணிக் கட்சியினர், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் களத்தில் இணைந்து செயல்படவில்லை. இதனால் கட்சித் தொண்டர்கள் கடும் ஏமாற்றத்திலும் விரக்தியிலும் இருந்தனர். ஆய்வுக் கூட்டங்களில் இந்த குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டதுஎன்று குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தொகுதி அளவில் கட்சிக்குள் ஏற்பட்ட அதிருப்தி மற்றும் உள்கட்சிப் பிளவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமாக அமைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதவி மறுக்கப்பட்டவர்கள் அல்லது புறக்கணிக்கப்பட்டதாக கருதிய சில நிர்வாகிகள், கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக செயல்பட்டதோடு, சிலர் தவெக பக்கம் சென்றதாகவும் குழு உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

 

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow