காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகலம்.. இறைக்கப்பட்ட மாங்கனிகள்..பிரசாதமாக சாப்பிட்ட பக்தர்கள்

காரைக்கால்: பிரசித்தி பெற்ற மாங்கனி திருவிழா காரைக்காலில் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். பிள்ளை வரம் வேண்டி காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை பிறக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை இறைத்து வழிபட்டனர்.

Jun 21, 2024 - 13:22
காரைக்கால் மாங்கனி திருவிழா கோலாகலம்.. இறைக்கப்பட்ட மாங்கனிகள்..பிரசாதமாக சாப்பிட்ட பக்தர்கள்

63 நாயன்மார்களில் ஒருவராக போற்றப்படும் அம்மையார் காரைக்கால் அம்மையார். நான்காம் நூற்றாண்டில் தோன்றி தமிழுக்கும், சைவ சமயத்துக்கும் பெரும் தொண்டாற்றியவர்.   திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 11 பாடல்கள், திருவிரட்டை மணிமாலை 20 பாடல்கள்,  அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள் என இவர் எழுதிய பாடல்கள் அனைத்துமே தமிழ் இலக்கியத்தில் முக்கியமானவை. 

மனிதகுலத்தில் பிறந்து, வளர்ந்து இறைநிலையை அடைந்த காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் காரைக்காலில் உள்ள காரைக்கால் அம்மையார் கோவிலில் ஆண்டுதோறும் புராண மரபுபடி ஆனி பவுர்ணமியில் மாங்கனி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.

காரைக்காலில் உள்ள சிறந்த வணிகர் குலத்தைச் சேர்ந்த தனதத்தன் என்பவருக்கு மகளாக பிறந்தவர் புனிதவதி. இவர் சிறுவயது முதல் சிவ பக்தியிலும், சிவனடியார்களுக்கு தொண்டு புரிவதிலும் சிறந்தவர். இவரை நாகப்பட்டினத்தில் உள்ள வணிகரின் மகன் பரமதத்தனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். திருமணத்துக்கு பிறகும் புனிதவதி சிவனடியார்களுக்கு அன்னம், பொன், பொருட்களை கொடுத்து சிவ தொண்டு செய்து வந்தார். 

ஒரு நாள் பரமதத்தனுக்கு தனக்கு கிடைத்த மாங்கனிகளை தனது வேலையாட்கள் மூலம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினான். அதனை பெற்றுக்கொண்ட புனிதவதி தனது கணவனின் வரவுக்காக காத்திருந்தார். அப்போது பசியுடன் ஒரு சிவனடியார் வந்தார் சிவன். வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்த புனிதவதியோ,சமைக்க சற்று தாமதமாகும் காத்திருங்கள் என்று கூறினார். அதற்கு சிவனடியார் ''அம்மா! தாயே! பசியில் உயிர் போகிறது, ஏதேனும் இருப்பதைக் கொடும்மா!'' என்றார்.

அப்போது புனிதவதியாருக்கு தனது கணவன் கொடுத்து அனுப்பிய மாங்கனிகளில் இருந்து ஒன்றை எடுத்து சிவனடியாருக்கு உண்ணக்கொடுத்தார். அதனை உண்ட சிவனடியார் வேடத்தில் வந்த சிவபெருமானும் புனிதவதியை வாழ்த்தி மறைந்தார். இரண்டாவது மாங்கனி மதிய உணவு உண்பதற்காக வீட்டிற்கு பரமதத்தன், தனது மனைவி புனிதவதியிடம் மாங்கனிகளை எடுத்து வா என்று கேட்டார். 

புனிதவதியோ, சிவனடியாருக்கு கொடுத்த ஒரு மாங்கனி போக மீதம் இருந்த மற்றொரு மாங்கனியை தன் கணவனிடம் கொண்டு வந்து கொடுத்தார். அக்கனியை உண்ட பரமதத்தன், இரண்டாவது மாங்கனியையும் எடுத்து வருமாறு கூறினார்.இதைக் கேட்ட புனிதவதி, பூஜை அறைக்கு சென்று சிவபெருமானிடம் மாம்பழம் கொடுத்து அருளுமாறு வேண்டினார். சிவனும் உடனே புனிதவதிக்கு மாங்கனியை அருளினார். அதனை பெற்றுக் கொண்ட புனிதவதி, தன் கணவன் பரமதத்தனிடம் மாங்கனியை கொடுத்தாள். அந்த மாம்பழத்தை  சாப்பிட்ட  பரமதத்தனுக்கு தான் முன்பு சாப்பிட்ட மாங்கனியை விட இரண்டாவது கனி மிகவும் சிறப்பான சுவையுடன் இருந்ததால், புனிதவதியிடம் மாங்கனி சுவையின் வேறுபாடு பற்றி கேட்டான்.

கணவரிடம் பொய் சொல்ல விரும்பாத புனிதவதி நடந்தவற்றை மறைக்காமல் தனது கணவனிடம் தெரிவித்தாள். இதனைக் கேட்ட பரமதத்தன், அப்படியானால் சிவபெருமானிடம் இருந்து இன்னொரு மாங்கனி பெற்றுத் தருமாறு வேண்டினான்.புனிதவதியும் சிவபெருமானை வேண்ட இன்னொரு மாங்கனியும் கிடைத்தது. இதனைக் கண்ட பரமதத்தன் தன் மனைவி ஒரு தெய்வம் என்று எண்ணி அவளது காலில் விழுந்து வணங்கினார். தன் மனைவியை விட்டு விலகி பாண்டிய நாடு வந்த பரமதத்தன், குலசேகரன் பட்டிணத்தில் தங்கி வணிகம் செய்ய ஆரம்பித்தான். பிறகு அங்கேயே ஒரு பெண்ணை மணந்து வாழ்ந்து வந்தான். அந்த பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு தனது முதல் மனைவியின் பெயரான புனிதவதி என்று பெயரிட்டு அழைத்து வந்தான். இந்த தகவலை அறிந்த புனிதவதியார் குலசேகரன்பட்டிணம் வந்து, ஊர் எல்லையில் உள்ள ஒரு மண்டபத்தில் அமர்ந்து கொண்டு கணவனுக்கு அழைப்பு விடுத்தார். தனது 2வது மனைவி, மகளுடன் வந்து முதல் மனைவியான காரைக்கால் அம்மையார் காலில் விழுந்து வணங்கி, அங்கு கூடியிருந்த மக்களையும் வணங்க வைத்தான்.

கணவனே தன்னை தெய்வம் என்று கூறி வணங்கியதால் இறைவனை வேண்டி பேய் உருவமாக மாறி காரைக்கால் சென்று அம்மை அப்பரை வணங்கிய பின்னர் அங்கிருந்து கயிலாயம் புறப்பட்டுச் சென்றார். காலால் நடப்பது குற்றம் என்று எண்ணிய புனிதவதியார், தனது தலையாலேயே கயிலாயத்தில் நடந்து சென்றார். அப்போது இறைவன், அம்மையே! நலமாக வந்தனையோ? நம்மிடம் வேண்டுவது யாது?'' என்று புனிதவதியை நோக்கி கேட்டார். அதற்கு அம்மையார்,இறைவா! உன்மீது என்றும் நீங்காத அன்போடு நான் இருக்க வேண்டும். பிறவாமை வேண்டும், மீண்டும் பிறந்தால் உம்மை என்றும் மறவாமை வேண்டும். அனுதினமும் உன் திருவடியின் கீழ் இருந்து என்றும் உன் திருநாமத்தை பாடிக் கொண்டிருக்கும் வரம் வேண்டும்'' என்று கேட்டார். 

உடனே சிவபெருமான், ''அம்மையே! நீவீர் பூலோகத்தில் உள்ள திருவாலங்காட்டில் எனது திருவடியின்கீழ் இருந்து பாடும் வரம் தந்தோம்'' என்று அருளினார். அதன்படி இன்றும் திருவாலங்காட்டில் உள்ள நடராஜப் பெருமானின் ரத்தின சபையில் காரைக்கால் அம்மையார் அமர்ந்து சிவபெருமானின் நடனத்தை கண்டு மகிழ்கிறார் என்பது ஐதீகம்.


காரைக்காலில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நேற்றைய தினம் பரமதத்தர் புனிதவதியார் திருமணம் நடைபெற்றது. நேற்றிரவு பிச்சாண்டவர் வெள்ளை சாற்றி புறப்பாடும், புனிதவதியாரும், பரமதத்த செட்டியாரும் முத்து சிவிகையில் திருவீதி உலா வருதலும் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 21) அதிகாலை 3 முதல் காலை 6 மணி வரை பிச்சாண்டவர், பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் தீபாராதனையும் நடைபெற்றது.விழாவின் சிறப்பு மிக்க நிகழ்வான பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் பிச்சாண்டவர் வீதியுலா புறப்பாடு காலை 9 மணிக்கு தொடங்கியது.

ஏராளமான பக்தர்கள் மாங்கனிகளை வீசி இறைவனை வழிபட்டனர். அந்த மாங்கனிகளை பலர் பிரசாதமாகவும் வாங்கி சாப்பிட்டனர். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் காரைக்கால் அம்மையார் கோயிலுக்கு வந்து மாங்கனி திருவிழாவின்போது மாங்கனிகளை படைத்து வழிபட்டால் கண்டிப்பாக குழந்தை வரம் கிடைக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருவீதி உலா வரும் போது மாங்கனிகளை பக்தர்கள் இறைத்த மாங்கனிகளை பலர் பிரசாதமாக வாங்கி சாப்பிட்டனர். மாலை 6 மணிக்கு அம்மையார் எதிர் கொண்டு அழைத்து மாங்கனியுடன் அமுது படைக்கும் நிகழ்ச்சி அம்மையார் கோயிலில் நடைபெறும்.நாளைய தினம் ஜோதி வடிவத்தில் இறைவனிடம் காரைக்கால் அம்மையார் ஐக்கியமாகும் நிகழ்வு நடைபெறும். மாங்கனி திருவிழாவை முன்னிட்டு ஏராளமானோர் காரைக்கால் நகரில் திரண்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow