Jaikrishn patel: ரூ.2.5 கோடிக்கு ஓகே.. லஞ்சம் வாங்கும் போது வசமாக சிக்கிய எம்.எல்.ஏ!
சுரங்கம் தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்விகளை வாபஸ் பெறுவதற்கு ரூ.20 லட்சம் லஞ்சம் பெற்றதாக ராஜஸ்தான் ஊழல் தடுப்புப் பிரிவு, நேற்று எம்.எல்.ஏ-வான ஜெய்கிருஷ்ண படேலை கைது செய்துள்ள சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Jaikrishn patel arrested: ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது பாஜக தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றையத் தினம் ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பகிடோரா தொகுதி (Bagidora) சட்டமன்ற உறுப்பினரான பாரத் ஆதிவாசி கட்சியின் (Bharat Adivasi Party- BAP) ஜெய்கிருஷ்ண படேல் மற்றும் இடைத்தரகர் விஜய் குமார் படேல் ஆகியோரை ஜெய்ப்பூரில் உள்ள எம்.எல்.ஏ. குடியிருப்பு பகுதியில் லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டதாக ஏசிபி இயக்குநர் ஜெனரல் (Anti-Corruption Bureau General Director) ரவி பிரகாஷ் மெஹர்தா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறையினரை கண்டதும், எம்.எல்.ஏ. பணத்தை அவரது உதவியாளரிடம் ஒப்படைத்தார். அவரை கைது செய்ய முயன்ற போது உதவியாளர் தப்பி ஓடிவிட்டார் என்றும் மெஹர்தா தெரிவித்துள்ளார்.
லஞ்சம் வாங்கியது எதற்காக?
சட்டமன்ற உறுப்பினர் லஞ்சம் கேட்பதாக புகார் தெரிவித்தவர் ரவீந்திர குமார். இவருக்கு தோடாபிமி பகுதியில் சொந்தமாக சுரங்கங்கள் உள்ளன. சட்டமன்றத்தில் பேசிய ஜெய்கிருஷ்ண படேல், மாநிலத்தில் சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் எழுப்பிய கேள்வியானது ரவீந்திர குமாருக்கு தொடர்புடைய சுரங்கங்கள் ஆகும். ரவீந்திர குமாரின் தந்தை ராம்நிவாஸ் மீனா பாஜகவின் மாநிலத் தலைவர்களில் முக்கியமானவர். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலில் தோடாபிமி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியில் சிக்கிய எம்.எல்.ஏ:
சுரங்கம் தொடர்பான கேள்விகளை வாபஸ் வாங்க சட்டமன்ற உறுப்பினர் மற்றும் புகார்தாரர் இடையே ரூ.10 கோடியுடன் பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளது. இறுதியில் ரூ.2.5 கோடி தருவருதாக சம்மதித்து, முதல் தவணையாக ரூ.1 லட்சம் எம்.எல்.ஏ-வுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது தவணையாக ரூ.20 லட்சம் தர முயன்ற போது தான் கைதாகியுள்ளார் எம்.எல்.ஏ. தப்பியோடிய அவரது உதவியாளரை தேடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. ஜெய்கிருஷ்ண படேல் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் நிலையில், அவரை கைது செய்வதற்கு முன்பாக சபாநாயகர் வாசுதேவ் தேவ்னானி மற்றும் உள்துறை அமைச்சர் பஜன் லால் சர்மாவுக்கும் முன்னரே தகவல் தெரிவிக்கப்பட்டதாக ஊழல் தடுப்புப் பிரிவு விளக்கமளித்துள்ளது.
பகிடோரா தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்த காங்கிரஸ் கட்சியின் மகேந்திர ஜீத் மால்வியா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பகிடோரா தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. பழங்குடியினருக்காக இத்தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜக வேட்பாளரை 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து எம்.எல்.ஏ-வாக தேர்வானார் ஜெய்கிருஷ்ணன் படேல் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






