Bengaluru : சூடுபிடிக்கும் பெங்களூரு வெடிகுண்டு சம்பவம்... களமிறங்கியது NIA!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Mar 4, 2024 - 11:31
Mar 4, 2024 - 11:32
Bengaluru : சூடுபிடிக்கும் பெங்களூரு வெடிகுண்டு சம்பவம்... களமிறங்கியது NIA!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு ஒயில்ஃபீல்டு ராமேஸ்வரம் கஃபேயில் கடந்த 1-ம் தேதி மதியம் 12 மணி அளவில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 10 பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலில் கேஸ் சிலிண்டர் வெடித்தது என்றும், அடையாளம் தெரியாத மர்மப் பொருள் வெடித்தது என்றும் கூறப்பட்டது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர் காவல்துறை அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் ஆகியோர் வந்து ஆய்வு மேற்கொண்டனர். 

இதற்கிடையில், உணவகத்தில் வெடிகுண்டுதான் வெடித்தது என அம்மாநில முதலமைச்சர் சித்தராமய்யா தெளிவுபடுத்தினார். உணவகத்தில் டைம் பாம் வைத்துவிட்டு, பேருந்தில் இருந்து டைமர் மூலம் வெடிகுண்டை இயக்கியுள்ளார் எனவும் தகவல் வெளியானது. மேலும், இதுகுறித்து விசாரிக்கப்படும் எனக்கூறிய அவர், தேவைப்பட்டால் என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட பரிந்துரைக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்தச் சம்பவம் குறித்து எச்.ஏ.எல் போலீசார் உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விசாரணையைக் கையிலெடுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் 4 பேரை கைது செய்து விசாரித்து வந்தனர். 

இந்த நிலையில், மத்திய புலனாய்வு அமைப்பான தேசிய பாதுகாப்பு முகமையின் வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow