தொடர் மிரட்டல்... கவுண்டம்பாளையம் ரிலீஸுக்கு வந்த சிக்கல்... ரஞ்சித் எடுத்த அதிரடி முடிவு
ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படம் இன்று வெளியாகவிருந்த நிலையில், தொடர் மிரட்டல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மறுமலர்ச்சி, நட்புக்காக உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்து பிரபலமானவர் ரஞ்சித். நடிகை பிரியா ரமனை காதல் திருமணம் செய்த ரஞ்சித், சில ஆண்டுகளிலேயே பிரிந்துவிட்டார். ஆனால், மீண்டும் இந்த ஜோடி தற்போது இணைந்து வாழ்ந்து வருகிறது. இந்த நிலையில் திரையுலகில் கம்பேக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்த ரஞ்சித், கவுண்டம்பாளையம் என்ற படத்தை இயக்கினார். மோகன் ஜி வரிசையில் அடுத்த நாடகக் காதல் எதிர்ப்புப் போராளியாக களமிறங்கியுள்ள ரஞ்சித், அதனை பின்னணியாக வைத்தே கவுண்டம்பாளையம் படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனை கவுண்டம்பாளையம் படத்தி ட்ரெய்லரில் பார்க்க முடிந்தது. முக்கியமாக இதில் பிரபல அரசியல் தலைவர் ஒருவரை டார்க்கெட் செய்து வசனங்கள் இருப்பதாக சர்ச்சையானது. இன்னொரு பக்கம் கவுண்டம்பாளையம் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் ரஞ்சித்தும் காட்டமாக பேசி வந்தார். ஒரு கட்டத்தில் தான் சாதி வெறி பிடித்தவன் தான் என வெளிப்படையாகவே கூறினார். இந்நிலையில், இன்று வெளியாகவிருந்த கவுண்டம்பாளையம் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை பார்த்த ஒரு தரப்பினர், இது தவறான கருத்துகளை மக்களிடம் பரப்புவதாக கருத்துத் தெரிவித்திருந்தனர். மேலும் கவுண்டம்பாளையம் படத்தின் சில கட்சிகள், அரசியல் கட்சி தலைவர்களை மையப்படுத்தி, வேறு கண்ணோட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த ரஞ்சித், சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தான் கவுண்டம்பாளையம் படத்தை எடுத்துள்ளதாகக் கூறினார். ஆனாலும் இந்தப் படத்தை ரிலீஸ் செய்தால் தியேட்டர்களில் பிரச்சினை வரும் என சொல்லப்பட்டது. இதனையடுத்து இன்று வெளியாகவிருந்த கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரஞ்சித் அறிவித்துள்ளார். மேலும், இதுதொடர்பாக முதலமைச்சரையும் செய்தித்துறை அமைச்சரையும் சந்தித்து படம் வெளியிட ஆதரவு கேட்பேன் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், கவுண்டம்பாளையம் படத்துக்கு வரும் எதிர்ப்பு குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும் ரஞ்சித் கூறியுள்ளார்.
இந்தப் படம் ரிலீஸாகக் கூடாது என்பதில் பலர் முனைப்போடு இருப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் சொல்வதை கேட்க வருத்தமாக இருப்பதாகவும், நாடகக் காதலை பற்றியும் அதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் வலியையும் படமாக எடுத்துள்ளேன். இதற்கு பல இடங்களிலிருந்து எதிர்ப்பு வருகிறது. ஒரு படம் எடுப்பது எவ்வளவு சிரமம் என்று எனக்கு தெரியும். என் வாயில் வந்த கருத்துகள் அனைத்தும் உண்மையே. நான் அரசியல்வாதி கிடையாது. இந்த படத்தின் வெற்றிதான் என்னை எதிர்பவர்களுக்கு நான் சொல்லும் பதில் எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மேலும், சென்சார் சான்றிதழ் வாங்கியும் இந்த படத்தை என்னால் வெளியிட முடியவில்லை. ஆனால், யார் எதிர்க்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன். தமிழக அரசின் அனுமதி பெற்று இந்த படத்தை விரைவில் வெளியிடுவேன் எனவும், இனி நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவையும் கடவுள் பார்த்துக்கொள்வார் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் நேர்மையாகவும் உண்மையாகவும் படம் எடுத்துள்ளேன். நான் பொய் சொல்லவில்லை. இந்தப் படத்தை திரையிட்டால் கலட்டா செய்வோம் என்று பலர் தியேட்டர் உரிமையாளர்களை மிரட்டுகிறார்கள். திரையரங்கின் பாதுகாப்பு மிக முக்கியம், நாடகக் காதலை பற்றி ஒரு நல்ல குடும்ப கதையை நான் எடுத்துள்ளேன். ஆனால் மிரட்டி என்னை போன்ற எளிய கலைஞனை வளரவிடாமல் தடுக்கிறார்கள். இந்தப் படம் இன்று வெளியிடப்படாது என்பதை வருத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்றுள்ளார்.
What's Your Reaction?