“கடவுளை கண்டவருமில்லை கமலை வென்றவருமில்லை..” இந்தியன் 2 ப்ரோமோஷன்: 90ஸ் கிட்ஸாக மாறிய ரோபோ ஷங்கர்
கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 வரும் 12ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் ப்ரோமோஷனுக்காக ரோபோ சங்கர் செய்த சம்பவம் இணையத்தை கலங்கடித்து வருகிறது.
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் 2 பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாகிறது. இதனால் இப்படத்தை வெறித்தனமாக ப்ரோமோஷன் செய்துவருகிறது படக்குழு. மலேஷியா, சிங்கப்பூர், மும்பை, ஐதராபாத், கேரளா, சென்னை என தனி விமானத்தில் பறந்து பறந்து ப்ரோமோஷன் செய்யப்படுகிறது. ஏற்கனவே பல கோடி செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2, போட்ட முதலை வசூல் செய்யுமா என சந்தேகமாக உள்ளது. ஆன்லைன் புக்கிங் ஆரம்பித்து இரண்டு நாட்களாகியும், ரிசர்வேஷன் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்னொரு பக்கம் இந்தியன் 2வில் கமல்ஹாசன் சில காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளார் என்றும், மூன்றாம் பாகத்தில் தான் உலக நாயகன் ஸ்கோர் செய்வார் எனவும் படக்குழு தரப்பில் இருந்தே செய்திகள் வெளியாகின. இதனால் கமல், இயக்குநர் ஷங்கர், முக்கியமாக லைகா சுபாஷ்கரன் ஆகியோர் கலக்கத்தில் உள்ளனர். இது போதாதென்று, இந்தியன் தாத்தாவுக்கு இப்ப என்ன வயசு, அனிருத் மியூசிக் சொதப்பல் என கேள்விகளும் விமர்சனங்களும் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியன் 2 படத்தை கரை சேர்க்க, நான் இருக்கிறேன் தலைவா, என கோதாவில் குதித்துள்ளார் ரோபோ சங்கர். உலக நாயகன் கமல்ஹாசனின் பரம ரசிகரான ரோபோ சங்கர், அவரைப் போலவே மிமிக்ரி செய்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகள் திருமணத்திற்கு முதல் பத்திரிகையை குடும்பத்துடன் சென்று கமலிடம் கொடுத்து ஆசிர்வாதம் வாங்கியிருந்தார். அதேபோல் கமல் பட விழாக்கள் அனைத்திலும் முதல் ஆளாக ஆஜராகிவிடுவதும் ரோபோ சங்கரின் வழக்கம்.
இதுமட்டும் போதுமா? இன்னும் கொஞ்சம் இறங்கி அடிக்கலாம் என, ஒரேடியாக 90ஸ் கிட்ஸ் ரேஞ்சுக்கு போஸ்டர் அடித்து இந்தியன் 2 படத்தை ப்ரோமோட் செய்து வருகிறார் ரோபோ. அதாவது 1990களில் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் வெளியாகும் போது, அவர்களது ரசிகர்கள் தாறுமாறாக போஸ்டர் அடித்து கொண்டாடுவார்கள். “உடல் மண்ணுக்கு உயிர் கமலுக்கு”, “முட்ட நினைத்தால் முரட்டுக் காளை… மோதிப் பார்த்தால் பாயும் புலி” என இதுபோன்று ரஜினி ரசிகர்களும் போஸ்டர்கள் அடித்து அட்ராசிட்டி செய்வார்கள்.
இதேபோல் விஜய், அஜித்தும் அவர்களது ரசிகர்கள் போஸ்டர் அடித்த வரலாறெல்லாம் உண்டு. “கருநாகத்தை கொஞ்சவும் முடியாது… அஜித்தை மிஞ்சவும் முடியாது..” என அதகளம் செய்த கதைகள் 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும். இதேமாதிரி இந்தியன் 2 படத்திற்கும் பழைய பாடாவதியான வசனத்தை போஸ்டராக அடித்து கிரிஞ்ச்சாக மாஸ் காட்டியுள்ளார் ரோபோ சங்கர். அதில், கடவுளை கண்டவருமில்லை கமலை வென்றவருமில்லை… இந்தியன் 2 வருக வருக!, டிக்ஷனரி ஆஃப் உலக சினிமா..” இவன் உலகநாயகனின் உறவு ரோபோ சங்கர் என கேப்ஷன் கொடுத்து மிரட்டியுள்ளார்.
சென்னையின் பல பகுதிகளில் ரோபோ சங்கர் ஒட்டியுள்ள இந்த போஸ்டர், கமல்ஹாசனின் பிறவி ரசிகர்களுக்கே ஜெர்க் கொடுத்துள்ளது. கோடி கோடியாக செலவழித்து இந்தியன் 2 ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் படக்குழுவினரும் ரோபோ சங்கரின் போஸ்டரால் நெகிழ்ச்சியில் திக்குமுக்காடி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?