முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!

தமிழக முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் குறித்து யூடியூப்பில் கருத்து வெளியிட்ட சாட்டை துரைமுருகன் உள்பட மூவர் மீது தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கிலிருந்து மூவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

Jun 30, 2026 - 21:00
முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசரடித் தெருவைச் சேர்ந்தவர் ரா.முருகேசன். திமுக நிர்வாகியான இவர், கடந்த 9.10.2021 அன்று சமூக வலைதளமான யூடியூப்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில செயலாளர் மகிழன் என்கிற சந்தோஷ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர், முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை உருவ கேலி செய்து பேசியுள்ளதாகக் கூறி,  பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். 

இந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு  தஞ்சாவூர் இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர்கள் வி.முத்துமாரியப்பன், எம்.ஆனந்த் ஆகியோர் ஆஜராகினர். 

வழக்கை விசாரித்த நீதிபதி நாகராஜன், இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது, போதிய ஆதாரங்களை கொண்டு குற்றத்தை நிரூபிக்காததால், இவ்வழக்கிலிருந்து சாட்டை துரைமுருகன்  உள்பட இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow