"ஓட்டு கேட்டு ஊருக்குள் வராதீங்க" தேர்தலை புறக்கணிக்கும் கிராம மக்கள்... "ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைப்போம்"
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 20 ஆண்டுகளாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்து, மக்களவை தேர்தலை புறக்கணிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
சீர்காழி அருகே கீழமாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்டது குமாரக்குடி கிராமம். இந்த கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த கிராமத்தில் குண்டும் குழியுமான சாலை, உவர்ப்பு குடிநீர் என கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறும் பொதுமக்கள், ஒவ்வொரு முறையும் தங்களது பகுதிக்கு வாக்கு சேகரிக்க வரும் அரசியல்வாதிகள், அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்து செல்வதாகவும், ஆனால், தேர்தலில் வெற்றி பெற்ற பின் கண்டுகொள்வதில்லை என்றும் கூறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு வரும் குமாரக்குடி பொதுமக்கள், வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க போவதாகவும், வாக்கு சேகரிப்பதற்காக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது தோழமை கட்சியினர் யாரும் ஊருக்குள் வரவேண்டாம் எனவும் ஃபிளக்ஸ் மற்றும் பேனர் அடித்து கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் வைத்துள்ளனர்.
இதனிடையே, குமாரக்குடியில் நடைபெற்ற பொதுமக்களின் ஆலோசனை கூட்டத்தில், அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
What's Your Reaction?