உதயசூரியன் சின்னம் ஒரு நெகடிவ்...அதைவிட அருண்நேரு ஒரு நெகடிவ்-- பாரிவேந்தர் கடும்தாக்கு!
தமிழ்நாட்டில் பாஜக அதிகளவில் வளர்ந்துள்ளது - பாரிவேந்தர்
திமுகவின் உதயசூரியன் சின்னம் ஒரு நெகெடிவ் எனவும், அதைவிட அமைச்சர் நேருவின் மகன் அருண்நேரு நெகடிவ் எனவும் ஐ.ஜே.கே நிறுவனர் பாரிவேந்தர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெரம்பலூரில் சிட்டிங் எம்பியாக இருக்கக்கூடிய இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை பாஜக கூட்டணியில் தேர்தலை சந்திக்கிறார். அதற்காக தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வரும் அவர், இன்று (மார்ச்-31) பெரம்பலூர் மாவட்டம் தோகைமலையில் பரப்புரை செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "கஞ்சா, அபின், ஹெராயின் போன்றவற்றால் தமிழ்நாட்டு மக்களை போதையில் தள்ளாட வைத்துள்ளது இந்த திராவிட மாடல் ஆட்சி. கடந்த 5 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தை முடக்குவதையே திமுக எம்பிக்கள் குறிக்கோளாக கொண்டிருந்தனர். தொகுதிகளுக்காக கொடுத்த நிதியை அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர். ஆனால், நான் தொகுதிக்காக வழங்கப்பட்ட நிதியை ஒரு பைசா கூட வீணாக்காமல் செலவு செய்தேன். அதுபோக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.126 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை மக்களுக்கு செய்து உதவியிருக்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை பாஜக 2% கூட வாக்குகளை பெறாது என விமர்சகர்கள் பொய் கருத்துகளை கூறுகின்றனர். தமிழ்நாட்டில் பாஜக அதிகளவில் வளர்ந்துள்ளது" என தெரிவித்தார்.
மேலும்,"தன்னை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளர் அருண் நேரு குறித்து பேசிய பாரிவேந்தர், அமைச்சரின் மகன் அவரது அப்பாவின் தோளில் ஏறி நின்றுக்கொண்டு மக்களை பார்க்கிறார். ஆனால், நான் களத்தில் மக்களோடு மக்களாக நிற்கிறேன். அத்துடன், உதயசூரியன் சின்னம் என்பதே ஒரு நெகடிவ். அருண் நேரு அதை விட ஒரு நெகடிவ்" என விமர்சித்தார்.
What's Your Reaction?