வாய்க்கு வந்ததை பேசிய சவுக்கு சங்கர் ! 3 ஆண்டு சிறை... நீதிமன்றம் வைத்த செக் !

பெண்ணை அவதூறாக பேசி மிரட்டிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Sep 29, 2026 - 21:30
Sep 29, 2026 - 21:27
வாய்க்கு வந்ததை பேசிய சவுக்கு சங்கர் ! 3 ஆண்டு சிறை... நீதிமன்றம் வைத்த செக் !
Savukku Shankar 3 Years Jail !

பிரபல யூடியூபரும், சமூக கருத்துகளை வெளியிட்டு வரும் சவுக்கு சங்கருக்கு பெண் ஒருவரை அவதூறாக பேசி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் குற்றவாளி என அறிவித்து, பெண்கள் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 509 பிரிவின் கீழும் இந்த தண்டனையை வழங்கியுள்ளார்.

அவதூறு பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு :

முன்னாள் செய்தி வாசிப்பாளரும், வழக்கறிஞருமான மகாலட்சுமி என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு சவுக்கு சங்கருக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.

அதில், சவுக்கு இணையதளம் மற்றும் பிற தளங்களில் தன்னை குறித்து அவதூறான கருத்துகள் வெளியிடப்பட்டதாகவும், தனது கண்ணியத்தை பாதிக்கும் வகையில் பேச்சுகள் இடம்பெற்றதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு சென்னை எழும்பூர் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கின் விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம் :

வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் இருதரப்பு வாதங்களை ஆய்வு செய்த நீதிபதி சிவசக்தி, சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை குற்றவாளி என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து, பெண்களை துன்புறுத்தல் தடுப்பு சட்டம் பிரிவு 4 மற்றும் IPC 509 ஆகிய பிரிவுகளின் கீழ் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் :

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சவுக்கு சங்கருக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், மேல்முறையீடு செய்வதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுக்கு சங்கர் மீது தொடரப்பட்ட வழக்குகள் :

சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல் மூலம் அரசியல், காவல்துறை மற்றும் பல்வேறு பொது விவகாரங்கள் குறித்து தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளில் அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சில வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டதுடன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்ததை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

தற்போது, பெண் ஒருவரை அவதூறாக பேசி மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் வழங்கியுள்ள 3 ஆண்டு சிறை தண்டனை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow