மா. அரங்கநாதனின் படைப்புகள் உலகத்தன்மை வாய்ந்தவை... நீதியரசர் ஆர்.மகாதேவன் புகழாரம்

மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகள் 2024 தமிழறிஞர்கள் தெ. ஞானசுந்தரம் மற்றும் கு.வெ. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது

Apr 17, 2024 - 10:09
மா. அரங்கநாதனின் படைப்புகள் உலகத்தன்மை வாய்ந்தவை... நீதியரசர் ஆர்.மகாதேவன் புகழாரம்

சென்னையில், மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் 2024 விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற நீதியரசர் அரங்க மகாதேவன், “மா. அரங்கநாதன் படைத்துள்ள கதாப்பாத்திரங்கள் உலகத்தன்மை வாய்ந்தது என்று பேசி, புகழாரம் சுட்டினார்.

தமிழ் இலக்கிய உலகில் தமது தனித்துவமான சிந்தனையால் தனியிடம் பிடித்திருக்கும் எழுத்தாளர் மா.அரங்கநாதன். அவர் பெயரிலான ‘மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் 2024’, முன்றில் இலக்கிய அமைப்பு சார்பாக முனைவர் தெ.ஞானசுந்தரம் மற்றும் முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன் இருவருக்கும் வழங்கப்பட்டது. சென்னை ராணி சீதை அரங்கத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழ்நாட்டின் இலக்கிய ஆளுமைகள் பலர் பங்கேற்றிருந்தனர். விழாவின் முக்கிய விருந்தினரும், எழுத்தாளர் மா.அரங்கநாதனின் மகனும், சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசருமான அரங்க மகாதேவன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடன் முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, கவிஞர் பிருந்தா சாரதி, சந்தியா பதிப்பகம் நடராஜன், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் வாழ்த்து மற்றும் இறை வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மா.அரங்கநாதன் பற்றிய காணொலி ஒன்று திரையிடப்பட்டது. அதன் பின்னர், இவ்வாண்டு விருது பெற்ற தமிழறிஞர்கள் இருவரையும் கவிஞரும் ஆவணப்பட இயக்குநரும் ரவி சுப்பிரமணியன் விரிவாக அறிமுகம் செய்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மா. அரங்கநாதனின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. பரிதி பதிப்பகத்தின் ‘மா.அரங்கநாதன் படைப்புகள்’ தொகுப்பும், தேநீர் பதிப்பகத்தின் ‘பொருளின் பொருள் கவிதை’ ஆகிய இரு நூல்களை நீதியரசர் அரங்க மகாதேவன் வெளியிட்டார். அதன்பின் விழாச் சிறப்புரை ஆற்றிய நீதியரசர், மா அரங்கநாதனைப் பற்றி இலக்கிய விமர்சகர்கள் கூறியுள்ள புகழ் மொழிகளைத் தொகுத்து உரையாற்றினார். குறிப்பாக மா.அரங்கநாதன் படைத்துள்ள முத்துக்கருப்பன் என்ற கதாபாத்திரம் உலகத்தன்மை வாய்ந்தது என்று குறிப்பிட்டார். மேலும், ஆண்டுதோறும் மா.அரங்கநாதன் விருதுகள் வழங்கப்படும் நோக்கம் உள்ளிட்டவை குறித்து நயம்பட உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து விருது பெற்ற தமிழறிஞர்கள் இருவரும் ஏற்புரை வழங்கினர். முதலில் பேசிய முனைவர் தெ.ஞானசுந்தரம், மா அரங்கநாதனின் கதை ஒன்றைச் சொல்லி, அவரது எளிமையான மொழி ஆளுமை குறித்து விளக்கிப் பேசினார். மேலும், இனிவரும் காலங்களில் இதுபோன்ற உயர்ந்த அங்கீகாரங்களை இளைஞர் ஒருவருக்கும் கொடுத்து வாழ்த்த வேண்டும் என்று நீதியரசரைக் கேட்டுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து பேசிய முனைவர் கு.வெ.பாலசுப்பிரமணியன், மா அரங்கநாதனின் கதைகளால் நான் எப்படி பாதிக்கப்பட்டேன் என்று பேச்சைத் தொடங்கி நகைச்சுவை ததும்பப் பேசினார். மா.அரங்கநாதனின் தனித்துவமான சிந்தனைகளால் தாம் கவரப்பட்ட விதம் பற்றியும் பேசி, விருது வழங்கியதற்கு நன்றி கூறி நெகிழ்ந்தார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர் பெருமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow