ரஷ்யாவில் வினோதம்! தண்ணீரில் இல்லை! கண்ணீரில் முளைத்த செடி ! அதுவும் எங்க தெரியுமா ?

கண்ணில் ஏற்பட்ட சிறிய காயம்... 4 மாதங்களாகத் தொடர்ந்த தலைவலி... மருத்துவப் பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி... ரஷ்யாவில் நடந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Oct 30, 2026 - 18:35
ரஷ்யாவில் வினோதம்! தண்ணீரில் இல்லை! கண்ணீரில் முளைத்த செடி ! அதுவும் எங்க தெரியுமா ?
Medical Mystery in Russia !

வீட்டில் மண்ணில் விதை போட்டு, தண்ணீர் ஊற்றினால்கூட சில நேரங்களில் செடி வளராது. ஆனால், ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரின் கண்ணுக்குள் சென்ற விதை, வேர்விட்டு முளைக்கத் தொடங்கிய வினோத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா பகுதியைச் சேர்ந்த 42 வயதான மக்ஸிம் ஸ்லெப்ட்சோவ் (Maxim Sleptsov) என்பவருக்குத்தான் இந்த வினோத அனுபவம் ஏற்பட்டுள்ளது.

விடுமுறையில் சென்ற இடத்தில் நடந்த விபத்து!

கடந்த கோடைக்காலத்தில் தனது நண்பரைச் சந்திப்பதற்காக சைபீரியாவின் தொலைதூரப் பகுதியான அபியிஸ்கி மாவட்டத்திற்குச் சென்றுள்ளார் மக்ஸிம். அங்கு மீன்பிடித்தல், பழங்கள் பறித்தல் என விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மரக்கிளை ஒன்று அவரது கண்ணில் பலமாகப் பட்டுள்ளது.

இதனால் கண்ணில் வலி, எரிச்சல், சிவத்தல் மற்றும் நீர் வடிதல் ஏற்பட்டுள்ளது. உடனே கண்ணைக் கழுவிய அவர், உள்ளே சிக்கியிருந்த சிறிய மரப்பட்டையையும் வெளியே எடுத்துள்ளார். பிரச்னை முடிந்துவிட்டதாக நினைத்திருக்கிறார். ஆனால், அந்த மரக்கிளையுடன் வந்த ஒரு சிறிய விதை மட்டும் கண்ணுக்குள் தங்கியிருப்பது அவருக்குத் தெரியவில்லை.

4 மாதங்களாகத் தொடர்ந்த கடுமையான தலைவலி!

நாள்கள் செல்லச் செல்ல கண்ணில் வலி மற்றும் வீக்கம் அதிகரித்துள்ளது. ஒரு கட்டத்தில் இரட்டைப் பார்வை, பார்வைக் குறைபாடு எனப் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, காலையில் எழுந்தவுடன் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தலைவலியால் அவதிப்பட்ட மக்ஸிமுக்கு, என்ன காரணம் என்றே புரியவில்லை. மேலும், அவர் வசித்த தொலைதூரப் பகுதியில் இருந்து கண் மருத்துவமனைக்குச் செல்வதும் எளிதான காரியமாக இல்லை.

கண்ணுக்குள் வேர்விட்ட விதை!

ஒருவழியாக யகுட்ஸ்க் நகருக்குத் திரும்பிய மக்ஸிம், அங்குள்ள அவசர கண் மருத்துவ மையத்திற்குச் சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்களுக்குக் காத்திருந்தது மிகப்பெரிய அதிர்ச்சி!

அவரது கண்ணுக்குள் சென்றிருந்த சிறிய விதை, அப்படியே முளைக்கத் தொடங்கியிருந்தது. கண்ணின் வெள்ளைப் பகுதியை மூடியிருக்கும் மெல்லிய திசுவான கஞ்சங்க்டைவா (Conjunctiva) பகுதியில் அந்த விதை வேர்விட்டிருந்தது.

அதன் வேர் சுமார் 3 மில்லி மீட்டர் நீளத்திற்கு வளர்ந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் இவான் லுட்ஸ்கான், தனது மருத்துவ அனுபவத்தில் மிகவும் வித்தியாசமான சம்பவம் இது என்று தெரிவித்துள்ளார்.

செடியைப் பிடுங்கிய கண் மருத்துவர்கள்!

தொடர்ந்து கண் மருத்துவர் எலிசவெட்டா கார்போவா, உள்ளூர் மயக்க மருந்து செலுத்தி, ஊசி உதவியுடன் கண்ணுக்குள் முளைத்திருந்த விதையை அகற்றியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதுபோன்ற ஒரு சம்பவத்தைத் தனது மருத்துவப் பணியில் இதுவரை சந்தித்ததில்லை என்று தெரிவித்துள்ளார்.

விதையை அகற்றியதும் காணாமல் போன தலைவலி!

பல மாதங்களாகத் தன்னைப் பாடாய்ப்படுத்திய தலைவலி, விதையை அகற்றிய பிறகு மறைந்ததால் மக்ஸிம் நிம்மதியடைந்துள்ளார். கண்ணுக்குள் வேர்விட்டிருந்த விதை அகற்றப்பட்டதை நினைத்து மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.

மரக்கிளை கண்ணில் பட்டபோது சிறிய காயம்தான் என்று நினைத்தவர், தனது கண்ணுக்குள் ஒரு விதை முளைத்து வளர்ந்திருக்கும் என்று கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்.

உண்மையான விவசாயியா இருப்பாரு போலனு பார்த்தா, மரத்துல மோதி விதைய கண்ணுல வாங்கி கண்ணு தண்ணில செடியா வளர்த்திருக்காரு மனுஷன் மக்ஸிம் ஸ்லெப்ட்சோவ்! செடி பெரிதாகி பூப்பதற்குள் மருத்துவர்கள் கண்டுபிடித்தது நல்ல விஷயம் தான்!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow