ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல்… முக்கிய தளபதிகள் உள்பட 11 பேர் பலி…
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், 2 தளபதிகள் உள்பட 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காசா மீது போர் தொடுத்த இஸ்ரேலுக்கு எதிராக, ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புகள் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனிடையே, லெபனான், சிரியா, ஏமன் நாட்டில் செயல்பட்டு வரும் குழுக்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளித் தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளித் தாக்குதலில், இஸ்ரேலுக்கு எதிரான இஸ்லாமிய படைகளை வழிநடத்திய தளபதிகளான முகமது ரீசா ஜஹேதி, முகமது ஹதி ஹஜ்ரியாஹிமி ஆகியோர் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர். அதில், ஈரானைச் சேர்ந்த 8 பேர், சிரியாவைச் சேர்ந்த இருவர் மற்றும் லெபனானைச சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என, பிரிட்டனை சேர்ந்த மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் F-35 போர் விமானங்கள் ஈரான் தூதரக கட்டிடத்தின் மீது 6 ஏவுகணைகளை வீசியதாக, சிரியாவுக்கான ஈரான் தூதர் ஹோசைன் அக்பரி கூறியுள்ளார். தாக்குதலில் சேதமடைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?