சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?

கமல்ஹாசன்–ஸ்ரீதேவி நடிப்பில் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான ‘சிகப்பு ரோஜாக்கள்’ உருவான விதம், இளையராஜாவின் இசை, சிம்பாலிக் காட்சிகள் என மறக்க முடியாத திரை அனுபவத்தை அலசுகிறது இந்தப் பதிவு.

Sep 27, 2026 - 21:00
சிகப்பு ரோஜாக்கள்..50 ஆண்டுகள் கடந்தும் குறையாத திகில்..கமலின் ‘திலீப்’ ஏன் இன்றும் மிரட்டுகிறது?
Sigappu Rojakkal

கொஞ்சம் பேச்சு... கொஞ்சம் சினிமா! - வி.ராம்ஜி

சைக்கோ த்ரில்லர் படங்கள், இன்றைக்கு வருடத்துக்கு ஆறேழு என வரிசைகட்டி வந்துகொண்டே இருக்கின்றன. அதற்குச் சொல்லுகிற காரணங்களும் ஏதேதோ சொல்லப்படுகின்றன. இப்படியாக, அடுத்தடுத்து நடக்கிற கொலைகளை யார் செய்கிறார்கள் என்பதைத் தேடும் இன்வெஸ்டிகேஷன் படங்கள், மலையாளத்தில் மிக மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்படுகின்றன. அதனால்தானோ என்னவோ ஓடிடி தளங்களில், மலையாளப் படங்களைத் தேடித்தேடிப் பார்ப்பதற்கான ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

சைக்கோ கொலைகள் என்பவை இன்னும் பதறடிக்கும். இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்டு, மனப்பிறழ்வுக்கு ஆளானவன், ஒவ்வொரு பெண்ணுடனும் பழகி, அவர்களைக் கொலை செய்து, புதைத்து, அதன் மீது ரோஜாச் செடிகளை நடுவது என்பது தமிழ் சினிமாவுக்குப் புதுசுதான். ரத்த வெறியும் பெண்கள் மீதான கோபமும் கொண்டு, கொன்று புதைத்து, ரோஜாச் செடியை நடும் ‘சிகப்பு ரோஜாக்கள்’, தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் த்ரில்லர். மிக முக்கியமான சைக்கோ கில்லர்.சொல்லப்போனால், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படம்தான், நம்மூர் சினிமாவின் முதல் சைக்கோ கில்லர் படமாக இருக்கும்!

‘பாரதிராஜா கிராமத்துக்காரர். அதனால சிட்டி சப்ஜெக்ட் படமெல்லாம் எடுக்கத் தெரியாது’ என பத்திரிகைகள் எழுதிய கோபத்துடன் அவர் எடுத்த படம்தான் இது. சொல்லப்போனால், ‘மயிலு’ கதையையும் ‘சிகப்பு ரோஜாக்கள்’ கதையையும் வைத்துக்கொண்டு அலைந்தபோது, எஸ் ஏ ராஜ்கண்ணு எனும் தயாரிப்பாளர் டிக் செய்த கதைதான் ‘மயிலு’. அதுதான் ‘பதினாறு வயதினிலே’.

சிம்பாலிக்காகவே கதை என்ன என்பதைச் சொல்லும் பாணியும் புதுசுதான்.

மிகப்பெரிய பங்களா. அங்கே தோட்டக்காரன் குழியை வெட்டுவான். செடியை நடுவான். நீரூற்றுவான். அப்போது எலி ஒன்று அவன் காலுக்குக் கீழே ஓடும். அந்த எலியைப்பிடித்து, மண்வெட்டியால் கொல்லுவான். இன்னொரு குழி தோண்டுவான். அந்த செத்த எலியைப் போட்டு, அதன்மேலே ரோஜாச்செடியை பதியனிடுவான் . அந்த வெள்ளை ரோஜா, ரத்தத்தால் சிகப்பு ரோஜாவாக மாறும். ‘சிகப்பு ரோஜாக்கள்’ பட டைட்டில் தொடங்கும். டைட்டிலுக்குள் கமல் ஹோட்டல், கேபரே என சுற்றுவதும் பெண்களுடன் நெருங்குவதுமாகக் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும்.
மறுநாள் காலை... அந்த பங்களாவில் உள்ள வேலைக்காரச் சிறுவன், டிரேயில் இரண்டு காபிக்களுடன் வருவான். டீன் ஏஜ் பையன் அவன். ‘சாரே...’ என்று தூங்கிக்கொண்டிருக்கும் கமலை எழுப்புவான். கட்டிலில் இருந்து கமல் எழுந்திருப்பார். கொண்டு வந்த ஒரு காபிக்கோப்பையைக் கொடுப்பான். இன்னொரு காபிக் கோப்பையைப் பார்ப்பான். படுக்கையைப் பார்ப்பான். அங்கே பெண்ணின் உள்ளாடைகள் மட்டுமே இருக்கும். பெண் இருக்கமாட்டாள். காபிக்கோப்பை அப்படியே இருக்கும். அந்தப் பையனுக்குக் குழப்பமாக இருக்கும். முதல் காட்சியிலேயே, சிம்பாலிக்காக என்ன நடந்திருக்கும் என்பதை பாரதிராஜா உணர்த்தியிருப்பார்.

திருநெல்வேலியைப் பூர்வீகமாகக் கொண்ட இளைஞன், மும்பையில் வேலை நிமித்தமாகச் சென்று, மனப்பிறழ்வுக்கு ஆளாகி, பெண்களைக் கொன்று போட்ட நிஜ வாழ்க்கையின் இன்ஸ்பிரேஷன் தான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்று இயக்குநர் பாரதிராஜா சொல்லியிருக்கிறார்.

கிராமத்தில் சிற்றன்னையின் அடி உதைக்கு பயந்து, கொடுமைகளால் துன்புறுத்தப்பட்டு, ஊரை விட்டு ஓடுகிறான்  டீன் ஏஜ் பையன் ஒருவன். பிராமணக் குடும்பம் ஒன்றில் அடைக்கலமாகிறான். அங்கே உள்ள இளம்பெண் செய்யும் காரியத்தால், கெட்ட பெயரைச் சம்பாதிக்கிறான். ஆகவே அங்கிருந்து ஓடுகிறான். பிறகு மிகப்பெரிய பணக்காரர் வீட்டில் தன் பசியைச் சொல்லி சாப்பிட ஏதாவது கொடுங்க சார் என்கிறான். அவன் மீது இரக்கம் கொண்டு, அவனை வீட்டோடு சேர்த்துக்கொள்கிறார்கள் அந்தத் தம்பதி.
அங்கே, எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, பிரியமும் அன்புமாக, சோறும் தூக்கமுமாக வளர்கிறான். ஒருநாள்... கணவர் விமானத்தில் வெளியூரோ வெளிநாடோ செல்லக்கிளம்புகிறார். அன்றிரவு வேறொரு ஆணுடன், மதுபோதையில் வீட்டுக்கு வருகிறாள் முதலாளி அம்மா. இதைக் கண்டு கதிகலங்கிப் போகிறான் அந்தப் பையன். ’இப்படி கோளாறு பிடிச்சவளா இருக்காளே...’ என்று அதிர்ச்சியாகிறான். இதேவேளையில், விமானத்திலும் கோளாறு. மீண்டும் விமானம் வந்து தரையிறங்க, முதலாளி வீடு திரும்புகிறார்.

வேறொருவனுடன் தன் மனைவி இருப்பதைக் கண்டு கடும் கோபம் அடைகிறார். துண்டைக்காணோம் துணியைக் காணோம் என்று சல்லாபிக்க வந்தவன், தெறித்து ஓடுகிறான். நம்பிக்கைக்கு பங்கமாக நடந்துகொண்ட மனைவியைக் குத்திக் கொல்கிறார் முதலாளி. சிறுவயது முதலே பெண்களால் வஞ்சிக்கப்பட்டும் குற்றமே செய்யாமல் தண்டிக்கப்பட்டும் வந்த அந்தச் சிறுவன்.
‘இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான். குத்துங்க எஜமான் குத்துங்க, இந்தப் பொம்பளைங்களே இப்படித்தான்’ என்று அந்தக் கொலையை ஆமோதிக்கிறான். அவனை தன் மகனாகவே பாவித்து, தன் சொத்து, வியாபாரம் என சகலத்தையும் தருகிறார் அவர். அத்துடன் வீட்டின் அவுட் ஹவுஸில் இருந்தபடி, இந்த மாதிரியான பெண்களைக் கொல்லவும் மகனைத் தூண்டுகிறார். அந்தப் பையனும் வளர்கிறான்; பெண்களைத் தேடித்தேடி கொல்லுகிறான்; கிட்டத்தட்ட வேட்டையாடுகிறான். பூனை மாதிரி சாதுவாக பார்க்கத் தெரிபவன், புலியாகக் பாய்ந்து குதறிப் போடுபவனாக இருக்கிறான். அவன் வீட்டில் வளருகிற பூனையும் ஒரு சிம்பாலிக்தான்!
 
பாவம்... இதெல்லாம் தெரியாதவளாக இருக்கிறாள் நாயகி. அவனை நம்புகிறாள். காதலை ஏற்கிறாள். கல்யாணமும் செய்துகொள்கிறாள். அவளைக் கொல்லும் திட்டம் தள்ளித்தள்ளிப்போகிறது. இந்தநேரத்தில்தான், அவனைப் பகீர் உண்மைகள் முழுவதும் தெரிந்துகொள்கிறாள். கையளவு சைஸ் டைரியில் எழுதிவைக்கவேண்டியதை, ஒரு அறைக்குள் இருக்கிற சுவர் முழுவதும் எழுதிவைத்திருப்பதைப் படித்து தெரிந்து, பதறியடித்து ஓடுகிறாள்.  தப்பிக்கிறாள். அவன் துரத்துகிறான். அவள் தப்பித்தாளா, அவன் போலீஸிடம் பிடிபட்டானா என்பதை சீட் நுனிக்கு நம்மை வரவைத்து, அந்த பங்களாவின் பெரிய கதவைத் தாண்டி நம்கண்களைத் துழாவவிட்டிருப்பார் பாரதிராஜா.

கமல், ஸ்ரீதேவி, வடிவுக்கரசி, ரஜனி, கவுண்டமணி, சக்கரவர்த்தி என அவ்வளவுதான் கேரக்டர்கள். அதிலும் கமல், ஸ்ரீதேவி, வடிவுக்கரசிதான் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் மூன்றாவது படமாக பாரதிராஜா எடுத்ததுதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’. சொல்லப்போனால், இதனிடையே கிராமத்தில் பிறந்து வளர்ந்த பாரதிராஜா, கிராமக் கதைகளையே எடுத்துவரும் பாரதிராஜா, நகரத்துக் கதைகளெல்லாம் அவருக்கு எடுக்கத் தெரியாது என்று பத்திரிகைகள் எழுதின. இதில் கோபம் அடைந்துதான் ‘சிகப்பு ரோஜாக்கள்’ பண்ணினேன் என்கிறார் பாரதிராஜா.

நாயகியை சாலையோரத்தில் பார்ப்பார். அவர் ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்ப்பார். அங்கே சென்று கர்ச்சீப் கேட்டு வருவார் கமல். அடிக்கடி தொடரும் காட்சிகள் இவை. நாயகிதான் ஸ்ரீதேவி. அவரிடம் ஆங்கிலப் புத்தகம் இருக்கும். அதில் பெண்ணின் பெயர் பேனாவால் எழுதப்பட்டிருக்கும். அதுதான் ஸ்ரீதேவியின் பெயர் என்று நினைத்து, போன் செய்வார். பீச்சுக்கு வரச்சொல்லுவார். அங்கே... நாயகிக்குப் பக்கத்தில் இருந்தபடி வேலை பார்க்கும் ரஜனிதான் வந்திருப்பார். அந்தப் புத்தகம் அவருடையது. அந்தப் பெயருக்கு உரியவர் ரஜனிதான். கடற்கரையில், சிலைக்கு அருகே நிற்பார். சிலையைச் சுற்றி வருவார். அவ்வளவுதான். ‘இன்னிக்கி ஐஸ்க்ரீம் க்ளோஸ் ஆயிருச்சு’ என்று ஐஸ் விற்பவர் சொல்லுகிற வாய்ஸ் மட்டும் கேட்கும்.இதுவும் சிம்பாலிக்தான்! கமல் அலுவலகத்தில் இண்டர்வியூ. பெண்கள் வந்திருப்பார்கள். அதில் தேர்வுக்கு வந்தவர்தான் வடிவுக்கரசி. கமல் செலக்ட் செய்வார். வேலைக்கு மட்டுமல்ல... மரணத்துக்குமாகத்தான்! சித்ரா எனும் கேரக்டரில் வடிவுக்கரசி அறிமுகமான படம் இதுதான்!

இங்கே, கமலும் ஸ்ரீதேவியும் விரும்புவார்கள். கல்யாணம் செய்துகொள்வார்கள். அங்கே வடிவுக்கரசியின் அண்ணன், ஹோட்டல் சப்ளையர் பாக்யராஜுடன் அலுவலகம் வந்திருப்பார். ‘என் தங்கச்சி காணாமப் போன அன்னிக்கி, ஹோட்டலுக்கு வந்து ஒருத்தனோட சாப்பிட்டிருக்கா. அந்த சப்ளையருக்கு அவனை அடையாளம் தெரியும்’ என்று வடிவுக்கரசியின் அண்ணன் சொல்ல... இந்த விஷயங்களால், ஸ்ரீதேவியைக் கொல்லும் திட்டம் கமலுக்கு தள்ளிப் போகும். அன்றிரவு... சப்ளையரைப் பார்க்க கமல் செல்வார். இங்கே ஸ்ரீதேவியின் ரத்தம் பார்த்து கமல் வளர்க்கும் பூனை துரத்தும்.
ஒரு அறைக்குள் ஓடிப்பதுங்குவார். அந்த அறையின் சுவர் முழுக்க, கமலின் வரலாறு எழுதப்பட்டிருக்கும். சுவர் முழுக்க டைரி போல் கமல் எழுதிய விஷயங்கள் கமல் யார் என்பதை ஸ்ரீதேவிக்கு உணர்த்தும். அறையை விட்டு ஜன்னலுக்கு வந்து வெளியே பார்ப்பார். மழை. பூமியில் இருந்து ஒரு கை வெளியே வரும். மிரண்டு போவார். அவுட் ஹவுஸில் என்ன இருக்கிறது என்பதையும் பார்ப்பார். அங்கே கமலின் வளர்ப்பு அப்பா, ஒவ்வொரு பெண்களையும் கமல் கொல்லும் வீடியோவை ரசித்துப் பார்த்தபடி இருப்பார்.

அங்கே... சப்ளையர் பாக்யராஜ், சகலத்தையும் சொல்லாமல் இருக்க நிறைய பணம் கேட்பார். பணம் கொடுப்பார் கமல். இன்னும் இன்னும் என கேட்க, கடுப்பாகிற கமல், பாக்யராஜையும் கொன்றுபோடுவார். வீட்டுக்கு வந்தால்,ஸ்ரீதேவிக்கு எல்லா உண்மையும் தெரிந்துவிட்டது எனும் உண்மை கமலுக்குத் தெரிந்துவிடும். வீட்டை விட்டு வெளியே ஓடும் ஸ்ரீதேவியைக் கொல்லத் துரத்துவார். கல்லறையில் சிலுவைக்கம்பியில் வயிறு குத்தி, மயங்கி, பழசையெல்லாம் மறந்த நிலையில், கைதியாகி ஜெயிலில் இருப்பார் கமல்.

படம் தொடங்கியதும் ஜெயிலுக்கு வந்து கைதிகளுக்கு, தன் பிறந்தநாளில் பழங்கள் தருவார் கமல். அப்போது, ஒவ்வொரு கைதியாக அறிமுகப்படுத்துவார் போலீஸ். ‘இவன் சந்தேகத்தால பொண்டாட்டியக் கொன்னுட்டான்’ என்று சொல்ல, மற்றவர்களுக்கு பழங்கள் மட்டுமே கொடுக்கும் கமல், இந்தக் கைதிக்கு பழங்கள் கொடுத்துவிட்டு, கைகுலுக்குவார். இதுவே கமலின் கேரக்டரைஸேஷனை உணர்த்திவிடும் நமக்கு. இதுவும் சிம்பாலிக்காக பாரதிராஜா உணர்த்தும் காட்சி!

கமல் அழகு. ஸ்ரீதேவி கொள்ளை அழகு. இந்தப் படத்தின் மொத்தமாக உள்ள வசனங்களை எழுத, ஒரு ஏ டூ பியில் சாப்பிட்டதும் தருவார்களே பில்! அந்தப் பேப்பர் போதும்! கமல் பார்க்கும் பார்வையும் படத்தில் வருகிற மெளனங்களும் ஆயிரம் பக்க வசனம்  பேசின! கோட் சூட், பெரிய சைஸ் மூக்குக்கண்ணாடியில் கள்ளச்சிரிப்புடன் சிகரெட் பற்றவைக்கிற கமல், செம ஸ்டைலீஷ் கில்லராக மிரட்டுவார்!

’’இந்தக் கதையை இரண்டு ஹீரோக்களிடம் சொன்னேன். ‘நெகட்டீவ் ரோலா இருக்கு வேணாம்’ என்று சொல்லிவிட்டார்கள். கமலிடம் சொன்னதும் ‘பண்ணிருவோம்’ என்றார் கமல். நல்லவேளை... அந்த நடிகர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நல்லவேளை... கமல் ஏற்றுக்கொண்டார். இப்படியொரு ஸ்டைலீஷான, சைக்கோத்தனமான திலீப் கதாபாத்திரத்தை கமலைத் தவிர வேறு எவரும் இந்த அளவுக்குச் செய்திருக்கவே முடியாது. ஸ்ரீதேவி கேரக்டரும் அப்படித்தான்!’’ என்று பாரதிராஜா தெரிவித்திருக்கிறார்.

பொதுவாகவே, இப்படியொரு கேரக்டர் இருந்தால், அவனை மோசமானவனாகவோ அல்லது மிக மிக நல்லவனாகவோ காட்டுவதற்குப் பிரயத்தனப்படுவார்கள் இயக்குநர்கள். ஆனால், திலீப் கேரக்டரை உள்ளது உள்ளபடி மிகைப்படுத்தல் இல்லாமல் காட்டியிருப்பார் பாரதிராஜா. வேலைக்காரச் சிறுவனிடம் வயதைக் கேட்டு, அவனை ஊருக்கு அனுப்பி படிக்கச் சொல்லி, படிப்பதற்கு மாதாமாதம் பணம் அனுப்புகிறேன் என்று கமல் சொல்லும் இடமும், அவரின் கேரக்டரை உணர்த்திவிடும்.

இருபது நாட்களில், ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை எடுத்துமுடித்தார் பாரதிராஜா. படத்தின் இன்னொரு ஹீரோ... இளையராஜா. பின்னணி இசையை பத்தாயிரம் ரூபாய் செலவில், அதுவும் ஒன்றரை நாளில் முடித்துக்கொடுத்தாராம் இளையராஜா. நிவாஸின் ஒளிப்பதிவு ஆங்கிலப்படத்துக்கு இணையானதாக இருக்கும். கமல் கோபமாகி, பெண்ணைப் பார்க்கும் போது ஒரு மாண்டேஜ் ஷாட்ஸ் கட் ஷாட்ஸ் வைத்திருப்பார் பாரதிராஜா. அதற்கொரு இசை கோர்த்துத் தந்திருப்பார் இளையராஜா. முக்கியமாக, கறுப்புப் பூனையைப் பார்க்கும் போதே திகில் ஸ்ரீதேவிக்கு மட்டுமா? நமக்கு அடிவயிறு கலங்கிவிடும். இசையும் அதகளம் பண்ணும்!
முக்கியமாக, சிகரெட் பாக்ஸில் இருந்து சிகரெட்டை எடுக்க பாக்ஸை ஓபன் செய்வார் கமல். அப்படி ஓபன் செய்யும்போதெல்லாம் ஒரு இசை வந்துகொண்டே இருக்கும். அதாவது சிகரெட் பாக்ஸை ஓபன் செய்தால், இசை வருவது போல் இருந்திருக்கும் போல! அதைக் குறிப்பிட்டு, அதற்கான இசையையும் இளையராஜா தந்திருப்பார்.

கே எஸ் ரவிக்குமார் முதன்முதலாக இயக்கிய ‘புரியாத புதிர்’ படத்தில் ‘ஐ நோ ஐ நோ ஐ நோ’ என்று ரகுவரன், ஒற்றை வார்த்தையை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார், ஞாபகம் இருக்கா? இதேபோல், இந்தப் படத்தில் ஸ்ரீதேவி ஒரு கேள்வியைக் கேட்க, ஆத்திரமும் பதற்றமுமாக, ‘நத்திங் நத்திங் நத்திங்...’ என்று திரும்பத்திரும்பச் சொல்லி கத்துவார்.

திருச்சி பேலஸ் தியேட்டரில்தான் படம் வெளியானது. பொதுவாக நாய் மீது பயம் கொண்ட எனக்கு, இந்தப் படத்துக்குப் பிறகு பூனையைப் பார்த்தாலும் பயம் கவ்விக்கொண்டது. இன்னொரு விஷயம்... ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை பலரும் பலமுறை பார்த்தார்கள். ஆனால் ‘சிகப்பு ரோஜாக்கள் படத்துக்குத்தான் போயிருந்தேன்’ என சொல்லாமல், ஒவ்வொருமுறையும் வாய்க்கு வந்த படங்களையெல்லாம் சொல்லி எஸ்கேப் ஆனார்கள். காரணம்... படத்தை அடிக்கடி பார்க்கிற பசங்களை, ‘ச்சீ... மோசம்பா அவன்’ என்பது போல் கிசுகிசுத்த நண்பர்கள், நண்பர்களா அவர்கள்? எதிரிகள்; துரோகிகள்! ஆனால் நம்புங்கள்... கதைக்காக, திரைக்கதைக்காக, கமலுக்காக, கமலின் பார்வை பேசும் பேச்சுகளுக்காக, நம்ம ஸ்ரீதேவிக்காக, இளையராஜாவின் இசைக்காக... எத்தனை முறை பார்த்தேன் என்றே சொல்லமுடியாது. ஒரு ரோஜாத்தோட்டத்தில், எவ்வளவு ரோஜாக்கள் பூத்திருக்குமோ, அத்தனை முறை பார்த்ததாக எடுத்துக் கொள்ளுங்கள்!

படத்தில் ரெண்டே ரெண்டு பாடல்கள்தான். ஆனால் அதுவும் வேண்டாம் என்பது கமலின் வாதம். ஆனால் ‘பாட்டு வைக்கலேன்னா ராஜா என்னை திட்டித்தீர்த்திருவான்’ என்பது பாரதிராஜாவின் தர்க்கம். ஆனால் கமல் மறுத்தார். ‘இங்கிலீஷ் படம் மாதிரி வந்திருக்கு. பாட்டு போட்டு கெடுக்கணுமா?’ என்றார் கமல். பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் சம்மதிக்கவைத்தார்கள். அந்த நேரத்தில், ஐந்து படங்களுக்கு பாட்டும் கம்போஸிங்கும் போட்டிருப்பார் இளையராஜா. இதிலொரு ஆச்சரியம்... பாட்டே வேணாம் என்று புலம்பிய கமல்ஹாசனை ‘இந்தப் பாட்டை நீங்கதான் பாடுறீங்க’ என்று சொல்லிப் பாடவைத்தார் இளையராஜா. அதுதான் ‘நினைவோ ஒரு பறவை’. இன்னொரு பாட்டு மலேசியாவுக்கு! ‘இந்த மின்மினிக்கு கண்ணிலொரு மின்னல் வந்தது’ பாட்டு. ’இந்த மின்மினிக்கு’ பாடலில், ஸ்ரீதேவியின் கையில் உள்ள புத்தகத்துக்கு க்ளோஸப் வைப்பார் பாரதிராஜா. ‘சண்டே’  புக் என்பதைக் காட்டுவார். அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாம். அடுத்த ஷாட்... கமலும் ஸ்ரீதேவியும் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இதுவும் பாரதிராஜாவின் சிம்பாலிக்!
இன்றைக்கு முகநூல், ரீல்ஸ், மீம்ஸ், ட்விட்டர் என்றெல்லாம் வந்துவிட்டன. ஜென் ஸீ பசங்களுக்கு ‘சிகப்பு ரோஜாக்கள்’ என்றொரு படம் வந்தது கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்களும் கூட’குத்துங்க எஜமான் குத்துங்க... இந்த பொம்பளைங்களே இப்படித்தான்!’ என்று மீம்ஸில் இந்த வசனத்தைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்!
 
வரும் ஆடி போய் ஆவணி வந்தால்... என்பது போல், 2028 வந்தால் படம் வெளியாகி ஐம்பதாவது வருடம்! அதற்குள் இந்தப் படத்தை இன்னும் இன்னுமாக எத்தனை முறை பார்ப்பேன் என்று எனக்கே தெரியவில்லை! என்னைப் போலவே ஏராளமானவர்கள் எத்தனை முறை பார்ப்பார்கள் என்பதையும் நான் அறியவில்லை!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow