மின்பாதையில் பழுது நீக்கிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

ஊழியர் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார்.

Nov 17, 2023 - 11:48
Nov 17, 2023 - 12:58
மின்பாதையில் பழுது நீக்கிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

உயரழுத்த மின் பாதையில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சீர்காழி அருகே நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தைச்சேர்ந்த 37 வயதான சந்தோஷ்குமார் சென்னையில் உள்ள தனியார் மின் நிறுவனத்தில் பிட்டராக பணிபுரிந்து வந்தார். இவர் சீர்காழியை அடுத்த வள்ளுவக்குடி கிராமம் வடக்கு தெரு அருகே நெய்வேலியிலிருந்து காரைக்கால் செல்லும் உயரழுத்த மின் பாதையில் உள்ள மின் கோபுரம் மீது ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாரதவிதமாக சந்தோஷ்குமார் மீது ஹை-வோல்டேஜ் மின்சாரம் பாய்ந்திருக்கிறது. கடும் மின்சாரத் தாக்குதலால் மயக்கமடைந்த அவர் மின் கம்பியிலேயே தொங்கியிருக்கிறார். டனே சக ஊழியர்கள் அவரை அங்கிருந்து மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறும்போது. “இது மாதிரி உயரழுத்த மின் பாதையில் பணிபுரிபவர்கள் அதற்குரிய பாதுகாப்பு உடைகள் அணிந்துதான் பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால், இந்த தனியார் நிறுவன ஊழியர் எந்தவித பாதுகாப்பு உடைகளையும் அணியாமல், பாதுகாப்பு நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளாமல் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். இதனை எப்படி அந்த தனியார் நிறுவனம் அனுமதித்தது என்று தெரியவில்லை” என்றனர்.

இது குறித்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சக ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow