சொந்த வீடு வாங்க ஆசையா?..செந்தில்வேலனை வழிபட்டால் கிடைக்கும் பலன்!
சொந்த வீடு என்பது பலரின் கனவாக இருக்கும் நிலையில், ஜாதகத்தில் வீடு, மனை யோகம் எவ்வாறு அமையும், அதற்கான ஜோதிட விளக்கங்கள் மற்றும் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
பலன் தரும் பரிகாரம்..! - வி.ராம்ஜி
உடுத்த உடை, வயிற்றுக்கு உணவு, தங்கிக்கொள்ள வீடு... எல்லோருடைய கனவும் ஆசையும் இதுவாகத்தான் இருக்கிறது. ‘ஒரு குருவிக்கே கூடு இருக்கும்போது நமக்கென ஒரு வீடு வேண்டாமா?’ என்பதுதான் நம் அங்கலாய்ப்பு; ஆசை; கனவு; லட்சியம்!
நம் ஜாதகப்படி நமக்குச் சொந்த வீடு அமையுமா? எந்த இடத்தில் அமையும்? பிறந்த ஊரில் சொந்த வீடு அமையுமா? வசித்துக் கொண்டிருக்கும் ஊரில் அமையுமா? வெளிநாட்டில் அமையுமா? எந்த திசையைப் பார்த்த வீடு அமையும்? என்பதெல்லாம்தான் 99 சதவிகித மக்களின் ஒருமித்த வேட்கை! எந்த திசையைப் பார்த்து உறங்க வேண்டும், எந்த திசையை நோக்கி தலை வைத்து படுக்க வேண்டும், எந்தெந்த வண்ணங்களை வீட்டில் பயன்படுத்தலாம், எந்தெந்த வண்ணங்களில் தரைத்தளம் அமையலாம் என்றெல்லாம் ஒருவரின் ஜாதகத்தைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும் என ஜோதிட நூல்கள் அறிவுறுத்துகின்றன.
இப்போதைய சூழ்நிலையில், தனி வீடு என்ற கலாச்சாரம் மாறிவிட்டது. ‘எங்க தாத்தாவோட வீடு அம்புட்டு பெருசு. ஒரு தெருவுல வாசல் இருக்கும். அடுத்த தெருவுல கொல்லைப்புற வாசல் இருக்கும்’ என்று ப்ளாஷ்பேக் பேசிக்கொள்ளலாம். அடுக்குமாடி குடியிருப்புகளின் கலாச்சாரம் வளர்ந்து ஓங்கி உயர்ந்து நிற்கிறது. இந்தச் சூழ்நிலையில் எந்தந்த திசையைப் பார்த்து எது எப்படி அமைய வேண்டும் என்று சொல்வதற்கு சில விஷயங்கள் ஜாதகத்தில் ஆராய வேண்டியிருக்கிறது. எந்தவொரு சூழ்நிலையிலும் தலைவாசல்தான் பிரதானமாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர காவலுக்கு போடப்பட்டிருக்கும் இரும்புக் கதவையோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவாக அனைவரும் நுழையக்கூடிய வாசல்களையோ நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். .
ஒவ்வொருவருடைய வீட்டின் தலைவாசலைத் தான் பிரதானமாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அது எந்த ஊராக இருந்தாலும் சரி - எந்த நாடாக இருந்தாலும் சரி. அதனால்தான் அதற்கு தலைவாசல் என்றே பெயர். அப்படி பார்க்கும்போது, ஒவ்வொருவருடைய ராசிக்கும் ஒவ்வொரு திசையானது சொல்லப்பட்டிருக்கிறது.
’’ஒருவருக்கு சொந்த வீடு அமையுமா என்பதை லக்னத்திலிருந்து நான்காவது வீட்டை ஆராய்ந்து பார்த்து அதன் பிறகு முடிவு எடுக்க வேண்டும். நான்காவது வீட்டின் அதிபதி பலமாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு சொந்த வீடு அமையும். குறைந்தபட்சம் சொந்த மனையாவது அமையும். நான்காவது அதிபதி பலமாக இருந்து லக்னாதிபதி பலம் பெற்று இருந்தால் நிச்சயமாக சொந்த ஊரிலேயே சொந்த வீடு அமையும் என்பது விதி’’ என்கிறார் மதுரை ஜோதிடர் சாய் செல்வம். .
லக்னாதிபதியின் பலம் இறங்கி நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து காணப்படும் நிலையில் செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயமாக அவருக்கு சொந்த வீடு - மனை யோகம் உண்டு. பொதுவாகவே, நான்காம் வீட்டு அதிபதி அல்லது செவ்வாய் மிகவும் பலம் வாய்ந்து இருந்தால், அவருக்கு சொந்த வீடு மனை என்பது நிச்சயம் உண்டு. நான்காம் வீட்டு அதிபதியும் பலமிழந்து அல்லது செவ்வாயும் பலமிழந்து ஒருவருக்கு வீடு அமையுமானால் அவர் பெயரில் இருக்கக்கூடிய வீடு அல்லது மனையில் அவரால் வசிக்க முடியாது. அல்லது அந்த வீடு நீண்ட நாளைக்கு தங்காது என்பது ஜோதிட சாஸ்திர விதி கூறுகிற கணக்கு!
சொந்த வீடு அமைவதற்கு பரிகாரம் என்ன என்றெல்லாம் பலரும் கேட்பது வழக்கம்தான். . சொந்த வீடு வேண்டும் என வேட்கை உள்ளவர்கள் வேலவ வழிபாட்டை கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முருகப்பெருமானை தொடர்ந்து வணங்க வேண்டும். ஆழ்ந்த பக்தியுடன் முருகக் கடவுளை தொடர்ந்து வணங்கி பந்தால் மண் முதலான யோகங்களைத் தந்தருவாள் மயில்வாகனன்.
நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்துக்கு பூமிகாரகன் என்று பெயர். செவ்வாயினுடைய அதிதேவதை முருகக் கடவுள். யாருக்கெல்லாம் சொந்த வீடு மனை வேண்டும் என்று ஆசையும் கனவும் இருக்கிறதோ... அவர்கள் முருகக் கடவுளை வழிபடுவதன் மூலம் சொந்த வீடு மனை பாக்கியம் அமையும். செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை செவ்வரளி மாலை சார்த்தி எலுமிச்சை சாதம் நைவேத்தியம் செய்து அடுத்தவர்களுக்கு வழங்கி வருவது நன்மைகளைத் தரும்.
அதேபோல், உங்களுடைய ராசி, நட்சத்திரம் என்றைக்கு வருகிறதோ, அந்த நாளில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி முருகனையும் ஒரகடத்துக்கு அருகில் உள்ள வல்லக்கோட்டை முருகனையும் வணங்கிவந்தால், வீடு மனை யோகம் கிடைக்கப்பெறலாம்.
What's Your Reaction?

