இது ரொம்ப புதுசா இருக்கே!.. டீ விலை உயர்ந்ததால் போஸ்டர் ஒட்டிய புதுகை வாசிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் டீக்கடைகளில் டீ, காபி விலை உயர்வை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பல பகுதிகள் டீ, காபி, பலகாரம் மற்றும் டிபன் வகைகள் உள்ளிட்ட சில உணவு பொருட்களின் விலை தீடீர் என உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கீரமங்கலத்தில் டீக்கடைகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் டீக்கடை உரிமையாளர்களை கண்டித்து போஸ்டர் ஒன்று அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற தலைப்பில்
கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள் திடீரென விலையேற்றி உள்ளனர். எந்த பொருட்களின் விலையும் உயர்த்திடாத நிலையில், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் வகையில், டீ, பலகாரம் விலை ஏற்றப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தரம் இல்லாத மூலப்பொருட்கள், தரமில்லாத எண்ணை ஆகியவற்றை பயன்படுத்தி பொருட்கள் தயார் செய்து விற்கின்றனர். பொதுமக்கள் டீ குடிப்பதை தவிர்க்குமாறு வேண்டுகிறோம். இப்படிக்கு டீ குடிப்பவர்கள் நலச்சங்கம் மற்றும் சுற்று வட்டார கிராமமக்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், ரூ.10க்கு விற்பனையான டீ தற்போது, ரூ.12-க்கு, பலகாரம் வகைகள் ரூ.8 லிருந்து ரூ10க்கு, சில பகுதிகளில் ரூ10க்கு விற்பனை செய்யப்பட்ட பலகாரங்கள் ரூ12க்கும் விலை உயர்த்தப்பட்டுள்ளன.
இதே போல, ரூ7க்கு விற்பனை செய்யப்பட்ட இட்லி ரூ.9க்கும், ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்ட தோசை ரூ.50க்கும், ரூ.50 விற்பனை செய்யப்பட்ட ரவா தோசை ரூ60க்கும், ரூ25க்கு விற்பனை செய்யப்பட்ட புரோட்டா, சப்பாத்தி ரூ.30க்கு விலை உயர்த்தப்பட்டுள்ளன. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, ஆலங்குடி பகுதி, ஹோட்டல் சங்க தலைவர் ரெங்கநாதன் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக, டீ மற்றும் பலகாரம், டிபன், சாப்பாடு தயார் செய்யப்படும் மூலப்பொருட்களான சர்க்கரை, டீத்தூள், கடலை பருப்பு, உளுந்தம்பருப்பு, எண்ணெய், காய்கறிகள், சமையல் கேஸ் போன்றவைகள் தினந்தோறும் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.
மேலும், கடையில் பணிபுரியும் டீ, பலகார மாஸ்டர்கள், சமையல் மாஸ்டர்களுக்கு சம்பளம் கொடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் உயர்வு, சொத்துவரி உயர்வு, வாடகை உயர்வு, தனியார் பால் பாக்கெட் விலை உயர்வு போன்ற காரணங்களால் தான், விலை தற்போது ஏற்றப்பட்டுள்ளது” என்றார்.
What's Your Reaction?