மைக்கை பிடுங்குங்க... அடுத்தடுத்து வார்த்தைவிட்ட அமைச்சர்கள்... டென்ஷனான சபாநாயகர்..!

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர்களின் பேச்சுகளால் அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்கி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் உத்தரவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 17, 2026 - 16:30
மைக்கை பிடுங்குங்க... அடுத்தடுத்து வார்த்தைவிட்ட அமைச்சர்கள்... டென்ஷனான சபாநாயகர்..!

சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதியை ஏற்க முடியாது என தெரிவித்த சபாநாயகர், அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதனைத் தொடர்ந்து மேகமலை விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடர்பாக குறிப்பிட்ட கருத்துக்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட வாசகமும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

இதற்கிடையே வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திமுகவை விமர்சித்து பேசியபோதும் பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அவரது சர்ச்சைக்குரிய கருத்துகளும் நீக்கப்பட்டன.

அதன்பின்னரும் அமைச்சர் ரஞ்சித்குமார் தொடர்ந்து பேச முயன்றதால், குறுக்கிட்ட சபாநாயகர் அவரை அமருமாறு அறிவுறுத்தினார். மேலும், அவருக்கு மைக் வழங்க வேண்டாம் எனக் கூறி மைக் இணைப்பையும் துண்டித்தார்.

இதனிடையே திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அமைச்சர்கள் திமுக மற்றும் அதன் தலைமை குறித்து பேசும்போது சபாநாயகர் அதனை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினாலும், சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதால் அந்த கருத்துகள் மக்களை சென்றடைவதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், திமுக கொறடா எ.வ.வேலு, முன்னாள் முதலமைச்சர்களை சட்டப்பேரவையில் பெயரை குறிப்பிட்டு அழைப்பது தொடர்பாக ஏற்கனவே விதிமுறைகள் இருப்பதாகவும், அவற்றை முறையாக பின்பற்றினால் இதுபோன்ற சர்ச்சைகளை தவிர்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அடுத்தடுத்து அமைச்சர்களின் பேச்சுகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதுடன், ஒருவரின் மைக் இணைப்பே துண்டிக்கப்பட்டதால், சட்டப்பேரவை கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow