வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டத்தில் சேதமடைந்த வீட்டில் வசித்து வந்த பெண் விடுத்த கோரிக்கையினை ஏற்று கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6 மாதத்தில் தீர்வு கண்டுள்ளார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் அமைந்துள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது, அப்பகுதியில் வசித்துவரும் ராணி என்பவர் தான் வசித்து வரும் வீடு மிகவும் சேதமடைந்து உள்ளதால் தனக்கு உதவும்படி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, அவரது வீட்டிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மேற்கூரையில் போடப்பட்டுள்ள ஓடுகள் இறங்கியிருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர் உள்ளே விழுவதால் உறங்க வழியின்றி தவிக்கின்றோம். இதனால், மகள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசிப்பது ஆபத்தாக இருப்பதாக ராணி கூறினார்.
கலைஞர் கனவு இல்லத் திட்டம்:
இந்நிலையில், ராணிக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி அளித்தார். இதனை உறுதிசெய்யும் விதமாக ராணிக்கு அவர் வசித்துவரும் வீட்டின் பட்டா மாறுதல் ஆணையினை 2025 ஜனவரி மாதம் அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் வழங்கினார்.
தொடர்ந்து திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நடைபெற்ற, "கலைஞரின் கனவு இல்லம்" திட்டப் பயனாளிகளுக்குப் பணி தொடக்க ஆணை வழங்கும் விழாவில் ராணிக்கு 3.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான கலைஞர் கனவு இல்லம் பணி தொடக்க ஆணையை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
கலைஞர் கனவு இல்லம் கட்டுமான ஆணையை பெற்றுக்கொண்ட ராணி, "சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு எங்களது வீட்டிற்கு நேரில் வந்து பார்வையிட்டார். எங்களுக்கு கலைஞர் வீடு திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு வழிவகை செய்வதாக உறுதியளித்தார். அதேபோல, தற்போது வீடு கட்டுவதற்குப் பட்டா மற்றும் கட்டுமான ஆணையை அமைச்சர் வழங்கினார். எங்களது கோரிக்கையை ஏற்று 6 மாதங்களில் எங்களுக்கு கலைஞர் கனவு இல்லம் கிடைக்க வழிவகை செய்த அமைச்சருக்கு மிக்க நன்றி" என நெகிழ்ச்சியுடன் கூறினார்.
What's Your Reaction?






