மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது எனவும் நீதிபதி தெரிவித்தார்

Oct 17, 2024 - 16:01
மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா?- அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கில், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பது தொடர்பாக டெண்டர் நடவடிக்கைகளுக்கு விதித்த  தடையை மீறியதாக தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சுற்றுலாத் துறை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டுள்ளதாக கூறி, சென்னை பட்டாசு முகவர்கள்  நலச் சங்கத்தின் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் விஜய் ஆனந்த், யாருக்கும் டெண்டர் வழங்கப்படவில்லை என கடந்த 15ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்த அரசு,  14ம் தேதியே டெண்டர் வழங்கப்பட்டு விட்டதாகவும், 10ம் தேதியே அதற்கான தொகை பெறப்பட்டுவிட்டதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக இணையதளத்தில் தகவல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், ஏற்கனவே டெண்டர் வழங்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். 

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, அப்படியென்றால் டெண்டர் இன்னும் வழங்கப்படவில்லை என  ஏன் தெரிவிக்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.மேலும், மதுவை விற்கும் அரசால் பட்டாசு கடை அமைக்க முடியாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த  கூடுதல் தலைமை வழக்கறிஞர், காரணமில்லாமல் அரசை குறை கூற வேண்டாம். அவ்வாறு கூறினால் மவுனமாக இருக்க முடியாது எனவும் தெரிவித்தார்.தனி நபர்களுக்கு செல்லும் வருமானம்  அரசுக்கு வர வேண்டும் என்ற நோக்கிலேயே தான் பேசுவதாகக் கூறிய நீதிபதி,  நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக சுற்றுலாத் துறை செயலாளர், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow