சபாநாயகர் மீது பறந்த புகார்கள் ... கொடுத்தது தவெகவினர் தான்!

தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் பேச்சுகளுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருவது தவெக எம்எல்ஏக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியதாகவும் இது குறித்து முதலமைச்சர் விஜயிடம் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Aug 19, 2026 - 18:56
சபாநாயகர் மீது பறந்த புகார்கள் ... கொடுத்தது தவெகவினர் தான்!

தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல் நடைபெற்று  வரும் நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் கவனத்தை ஈர்த்துள்ளன.

அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தவறு செய்யும்போது, அவர்கள் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் என்ற பாரபட்சமின்றி சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கண்டித்து வருகிறார். தேவையற்ற பேச்சுகள் இடம்பெற்றால் அவற்றை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாகவும் அவர் எச்சரித்து வருகிறார்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசும் எம்.எல்.ஏ.க்களை உடனடியாக தடுத்து, விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் தொடர்பாக மட்டுமே பேச வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தி வருகிறார். அமைச்சர்கள் தவறான அல்லது ஆதாரமற்ற தகவல்களை முன்வைத்தாலும் அதற்கு சபாநாயகர் உடனடியாக ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்.

பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா புகைப்படம் ஒன்றை அவையில் காட்டியபோதும், ஆதாரமற்ற தகவல்களை முன்வைக்கக் கூடாது என சபாநாயகர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அமைச்சர்கள் சி.டி.ஆர். நிர்மல்குமார், ராஜ்மோகன், ரமேஷ், விக்னேஷ் உள்ளிட்டோர் பேசியபோதும் சபாநாயகர் குறுக்கிட்டு சில கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்கள் கவனம் பெற்றுள்ளன.

இதனால், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகள் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை பெற்றுள்ளன. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆளுங்கட்சி அமைச்சர்களையே கண்டிப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த நிலையில், சபாநாயகரின் கண்டிப்பான அணுகுமுறை குறித்து தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த சிலர் முதலமைச்சர் விஜயிடம் புகார் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் வழங்கப்படுவது தொடர்பாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு முதலமைச்சர் விஜய், சபாநாயகர் தனது பொறுப்பைத் தான் செய்து வருகிறார் என்றும், சட்டப்பேரவையை ஒழுங்காக நடத்துவதற்காக அவர் எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட வேண்டாம் என்றும் கூறியதாக தவெக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மேலும், தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அமைச்சர்கள் சட்டப்பேரவை நடவடிக்கைகளில் புதியவர்கள் என்பதால், அவையின் நடைமுறைகளை அவர்கள் கற்றுக்கொள்வதற்கு சபாநாயகரின் கண்டிப்பு அவசியம் என்ற கருத்தும் கட்சிக்குள் நிலவுவதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் விஜயை புகழ்ந்து பேசுவதைத் தடுத்து, ஆளுங்கட்சி உறுப்பினர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பு வழங்கி வரும் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகள் தொடர்ந்து கவனம் பெற்றுள்ள நிலையில், அவருக்கு எதிராக தவெகவினரிடமிருந்தே புகார் சென்றதாக கூறப்படுவது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow