“Press வைத்து நீங்க தான் ட்ரோல் செய்கிறீர்களே...” – அமைச்சர் ஆனந்த்

அமைச்சர் ஆனந்த் பத்திரிகையாளர்களைக் கண்டால் மட்டும் தெறிக்க அடித்து ஓடுகிறார் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Aug 19, 2026 - 20:18
“Press வைத்து நீங்க தான் ட்ரோல் செய்கிறீர்களே...” – அமைச்சர் ஆனந்த்

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 19) ஊரக வளர்ச்சித் துறை மற்றும் நீர்வளத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்ற நிலையில், விவாதத்தின் போது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காரசாரமான விவாதங்களும் நடைபெற்றன.

ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என்றும், செய்தியாளர்களைக் கண்டாலே ஓடிவிடுகிறார் என்றும் எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேகதாது விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்ட சமயத்தில்கூட, அந்தத் துறையைச் சேர்ந்த அமைச்சர் ஆனந்த் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளாமல் சிரித்துக்கொண்டே நழுவிச் சென்றது சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ துரை சந்திரசேகரன் பேசும்போது, “அமைச்சர் ஆனந்த் சட்டப்பேரவையில் பேசும்போது நன்றாகச் சமாளித்து விடுகிறார். பத்திரிகையாளர்களைக் கண்டால் மட்டும் ஏன் கிடுகிடுவென ஓடுகிறார் என்று தெரியவில்லை. ‘ஜருகண்டி... ஜருகண்டி...’ என திருப்பதி கோயிலில் சாமி கும்பிட ஓடுவது போல” எனக் கிண்டல் செய்தார்.

மேலும் பேசிய துரை சந்திரசேகரன், “அமைச்சர் ஆனந்த் எந்தப் பத்திரிகைக்கும் பதில் சொல்ல மாட்டேங்கிறார். அது ஒரு புது டெக்னிக்காக உள்ளது. ராஜ்மோகன் இதையெல்லாம் சமாளிக்க இருக்கிறார். புஸ்ஸி ஆனந்த் ரொம்பத் தீவிரமாக ஆய்வு பண்ணிக்கொண்டிருக்கிறார். காவிரி சம்பந்தப்பட்ட ஃபைல்கள் எல்லாவற்றையும் படித்துக்கொண்டிருக்கிறார். அதனால் அவரால் பத்திரிகைகளை சந்திக்க முடியவில்லை. அடிக்கடி கூட்டம் போட்டு வருகிறார் எனச் சொல்லி சமாளித்தார். அவரின் அந்தப் பேட்டியைப் பார்த்துப் பார்த்து சிரித்தேன்” எனப் பேசினார். அவரது கிண்டல் பேச்சால் அவை சிரிப்பலையில் ஆழ்ந்தது.

இதற்கு பதிலளித்த அமைச்சர் என்.ஆனந்த், “பிரஸ்ஸைப் பார்த்து நான் ஓடுகிறேன் எனக் கூறுகிறார்கள். நீங்கள் உங்களுக்கென ஒரு நிறுவனம் வைத்து, இவர்களிடம் இப்படி எல்லாம் கேளுங்கள் எனச் சொல்லி எங்களிடம் கேட்க வைத்து ட்ரோல் செய்யப் பார்க்கிறீர்கள். ‘என்ன நலத்திட்டத்தை செய்தீர்களோ, அதை மட்டும் சொல்லிவிட்டுப் போங்கள்’ என முதலில் மைக்கை நீட்டுவார்கள். உடனே நீங்கள் சொல்லிக் கொடுத்த இரண்டு கேள்விகளைச் சொருகிவிடுவார்கள். இதுவே உங்கள் வேலையாக இருந்தது.

இதற்கெல்லாம் நாங்கள் ஓடவில்லை, பயப்படவில்லை. பிரஸ் எல்லாம் என்னுடைய நண்பர்கள்தான். ஆனால், அவர்கள் 75 ஆண்டுகளாக உங்களுடனேயே பழகிவிட்டார்கள். இப்போதுதான் எங்களுடன் பழகுகிறார்கள். தேவையில்லாததைப் பேசாமல், மக்களுக்குத் தேவையானதை முதலமைச்சர் செய்யச் சொல்லியுள்ளார். யாரையும் பார்த்து பயம் கிடையாது. தீர்வுதான் நோக்கம்” எனப் பதிலளித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow