குடை ரெடியா மக்களே ! இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட்!

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கும், இடி-மின்னலுடன் பலத்த காற்றுக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Oct 1, 2026 - 15:30
குடை ரெடியா மக்களே ! இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அலர்ட்!
Tamil Nadu Weather Today !
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழைக்கான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று (அக்.1) நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின்போது இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் வாய்ப்பும் உள்ளது.
வளிமண்டலத்தில் சுழற்சி :
வட கடலோர தமிழ்நாட்டுப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் சுமார் 1.5 கி.மீ. உயரம் வரை வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களில் மழைக்கான சாதகமான வானிலை நிலவி வருகிறது.
மேலும், சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து மன்னார் வளைகுடா வரையிலான பகுதிகளில், உள் கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
9 மாவட்டங்களில் கனமழை :
இன்று (01-10-2026) நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கனமழையுடன் சில இடங்களில் இடி, மின்னல் ஏற்படுவதுடன், மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
8 மாவட்டங்களில் மிதமான மழை :
திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்த பகுதிகளிலும் மழையின் போது இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற பகுதிகளில் லேசான மழை :
தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும். புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை :
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை.
இன்று தமிழ்நாட்டின் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட சுமார் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானிலை எப்படி ? 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow