விசில் vs இரட்டை இலை... தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின் ராஜினாமா, தவெக ஆதரவு, கட்சிகளின் பிரசாரம் குறித்து தொகுதி மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

Sep 20, 2026 - 17:00
விசில் vs இரட்டை இலை... தாராபுரம் தொகுதியில் அனல் பறக்கும் போட்டி!

தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் ஓட்டு போட்ட மையின் தடம் முழுமையாக அழிவதற்குள் அங்கு இன்னொரு தேர்தல். இதே கருத்தை முன்வைத்து சலிப்புடன் ஒரு தரப்பும், ஆர்வத்துடன் இன்னொரு தரப்பும் என கலவையான மனநிலையில் இத்தொகுதிவாசிகள் வாக்குப்பதிவு நாளை எதிர்நோக்கியிருக்கின்றனர்.தனித் தொகுதியான தாராபுரத்தில் ஐந்து முனைப் போட்டி என்பதுடன், அதில் நான்கு கட்சிகளின் வேட்பாளர்கள் பெண்கள் என்பதுதான் ஹைலைட்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட சத்தியபாமா வெற்றிபெற்றார். வெற்றிபெற்ற சில நாட்களிலேயே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அடுத்து உடனடியாக த.வெ.கவில் இணைந்தார். இதைப் பார்த்த தாராபுரம் தொகுதிவாசிகள், ஓட்டு போட்ட எங்களை உதாசீனப்படுத்திவிட்டு ராஜினாமா செய்த சத்தியபாமாவிடம் தேர்தல் செலவுக்காக அரசு செலவழித்த பணத்தை வசூலிக்க வேண்டும்' என பொங்கினார்கள்.

தொகுதி முழுவதும் சத்தியபாமாவின் உருவ பொம்மைகளை எரித்தனர். 'மீண்டும் சத்தியபாமாவிற்கு சீட் வழங்கக்கூடாது' என கட்சி சாராதவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அக்டோபர் 6ம் தேதி தாராபுரத்தில் இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. திமு.க. வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யாவும். அதிமுக வேட்பாளராக பானுமதியும் அறிவிக்கப்பட்டனர்.

தவெக. சார்பில் சத்தியபாமாவும், நாதக சார்பில் கார்த்திகாவும், கம்யூனிஸ்ட்டுகள் சார்பில் லட்சுமணனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். தனித் தொகுதியான தாராபுரத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தவர்கள் அதிகமாகவும் அருந்ததியர் சமூகத்தவர்கள் நெருக்கமாகவும் இருக்கிறார்கள். ஆனால், இங்கு வெற்றியைத் தீர்மானிப்பது என்னவோ கொங்கு வெள்ளாளக் கவுண்டர் சமூக மக்கள்தான்.

தாராபுரம் நகர்ப்புறத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களும் புறநகரில் முதலியார், நாயுடு உள்ளிட்ட மக்களும் பரவலாக உள்ளனர். இப்படியான சூழலில், தொகுதி நிலவரம் என்ன சொல்கிறது, மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய களத்தில் இறங்கினோம்.

முத்து, தாராபுரம்

கடந்த தேர்தலில் நான் விசில் சின்னத்திற்கு ஓட்டு போட்டேன். இந்த தேர்தலிலும் விசில் சின்னத்திற்குத்தான் ஓட்டு போடுவேன். 'சத்தியபாமா எம்.எல். ஏவாக ஜெயித்துவிட்டு பதவிக்காகவும் பணத்திற்காகவும் ராஜினாமா செய்திருக்கிறார், அவருக்கு ஓட்டுபோடக்கூடாது என என்னிடம் சிலர் சொன்னார்கள். 'அதெல்லாம் முடியாது. நான் விசிலுக்குத்தான் ஓட்டு போடுவேன்' என உறுதியாகச் சொல்லிவிட்டேன்.

குருசாமி, ஊத்தூர்

"ஓட்டு போட்ட எங்களை பைத்தியக் காரர்களாக ஆக்கிவிட்டு ராஜினாமா செய்த சத்தியபாமாவை நிச்சயமாக தோற்கடிப்போம். பதவிக்காக எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் சத்தியபாமாவுக்கு விஜய் சீட் கொடுத்ததே தவறு. விஜய்க்கு வேற ஆளே கிடைக்கவில்லையா? சத்தியபாமாவை தோற்கடித்தால்தான் தாராபுரத்து வாக்காளர்கள் யாரென்று தெரியும்.

பொன்னுச்சாமி, மூலனூர்

ஆளுங்கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தால்தான் தொகுதிக்கு நன்மை செய்ய முடியும். தொகுதிக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக சத்தியபாமா கட்சி மாறினார். இதில் தவறேதும் இல்லையே. ஆளுங்கட்சி வேட்பாளரான சத்தியபாமாவிற்கே என் ஓட்டு, செல்வி, தாராபுரம் "யார் நிற்கிறார்கள் என்பதெல்லாம் எனக்குத் தேவையில்லை. விஜய் ஆட்சி சூப்பராக இருக்கிறது. என் ஓட்டு விஜய்க்கு தான்."

சுப்பாத்தாள், அரிக்காரன் வலசு.

"சத்தியபாமா எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தது தவறு. இருந்தாலும் சொல்கிறேன் தி.மு.க ஆட்சியைவிட விஜய் தம்பி நன்றாக ஆட்சி செய்கிறார். ஆனால், நான் யாருக்கு ஓட்டு போடுவேன் என்பதை அந்த நேரத்தில் முடிவு செய்வேன்." சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், சத்தியபாமா தன் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் பொதுமக்களின் கோபம் அவர்மீது இருந்தாலும், விஜய் மீதுள்ள பாசத்தால் தற்போதைய நிலவரப்படி விசில் சத்தமே அதிகம் கேட்கிறது. இந்த நிலையில் வேட்பாளர்களின் மனநிலை என்ன அன்பதை அறிய, அவர்களிடம் பேசினோம்.

'த.வெ.க சார்பில் சத்தியபாமாவை வேட்பாளராக அறிவித்த நிமிடமே எனது வெற்றி உறுதியாகிவிட்டது. தேவையில்லாத இடைத்தேர்தலை கொண்டு வந்ததற்காகவும் கோடிக்கணக்கான அரசு பணத்தை விரயம் செய்ததற்காகவும் தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள்.

கடந்த தேர்தலில் தன் அம்மா, அப்பாவிடம் விசிலுக்கு ஓட்டுபோடச் சொன்ன சிறார்கள், இந்த ஆட்சியில் ஏற்படும் மின்வெட்டை பார்த்துவிட்டு தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட சொல்கிறார்கள். மூன்றே மாதங்களில் இந்த ஆட்சியின் அவல நிலை மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதனால் என்னுடைய வெற்றியும் நிச்சயம் ஆகிவிட்டது.

சத்தியபாமா, த.வெ.க.

தி.மு.க.வும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க தயாரானதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் ராஜினாமா செய்தேன். மக்கள் விரும்பும் ஆட்சியில் மக்களுக்கு சேவை செய்வதற்காக தவெகளில் இணைந்தேன். என் மீது பொறாமைகொண்டவர்கள் மட்டும் அவதூறு பேசுகிறார்கள். மக்கள் என் பக்கம் வெற்றியும் என் பக்கமே"

பானுமதி,அ.தி.மு.க.

'தாராபுரம் தொகுதி மக்கள் வெற்றிபெற வைத்த சின்னம் இரட்டை இலை வெற்றிபெற்ற சத்தியபாமா கட்சிக்கு மட்டுமல்ல. தொகுதி மக்களுக்கும் துரோகம் செய்துவிட்டு பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். மக்களுக்கு உண்மை தெரிந்துவிட்டதால் கடந்த தேர்தலில் அதிமுக வாங்கிய வாக்குகளைவிட அதிக வாக்குகள் பெற்று நான் ஜெயிப்பேன்."

கார்த்திகா.நா.த.க.

"மாற்றம் என்று சொல்லி ஏமாற்றம் அடைந்த மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே தாராபுரம் தொகுதியில் நிற்கிறேன். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி வெற்றி பெற்ற சத்தியபாமா, குதிரை பேரம் நடத்தி தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது மீண்டும் மக்களை ஏமாற்றி வெற்றி பெற நினைக்கிறார். தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் முகத்திரையை கிழிப்பதுதான் என் முதல் வேலை. வெற்றிக்காக உழைத்துக்கொண்டிருக்கிறேன்."

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow