கரூரில் ‘ஜனநாயகன்’ ஷூட்டிங்? CBI கையில் வீடியோ ஆதாரம்? - சவுக்கு சங்கர் பகீர்!
கரூரில் நடைபெற்ற விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ‘ஜனநாயகன்’ படத்துக்கான காட்சிகள் படமாக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்திற்காக விஜய் கரூர் சென்றபோது எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டு, பரிதாபமாக 41 பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அன்றைய கூட்டத்துக்கு சுமார் 10,000 பேர் வருவார்கள் என்ற அடிப்படையில் அனுமதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், அதைவிட பல மடங்கு மக்கள் திரண்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்தது. விஜய் கூட்டத்துக்கு வருவதில் ஏற்பட்ட தாமதமும், அவர் வருவதற்கு முன்பே பல மணி நேரம் மக்கள் வெயிலில் காத்திருந்ததும் நெரிசல் அதிகரிக்க காரணமானதாக அரசு அதிகாரிகள் பின்னர் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, இவ்வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
இச்சம்பவம் நடைபெற்றபோது, ‘ஜனநாயகன்’ படத்துக்காக அங்கு படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை படத்தின் இயக்குநர் எச். வினோத் திட்டவட்டமாக மறுத்திருந்தார். கரூரில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், யூடியூப்பரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், இதுதொடர்பாக புதிய தகவல் ஒன்றை முன்வைத்துள்ளார். கரூர் மற்றும் நாமக்கல் பகுதிகளில் ‘ஜனநாயகன்’ படத்துக்காக விஜய் தரப்பினர் காட்சிகளைப் படமாக்கியதற்கான ஆதாரங்களை சிபிஐ கண்டறிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், கரூர் சம்பவத்தின்போது சினிமா கேமரா மூலம் படமாக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் சிபிஐ வசம் இருப்பதாகவும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், அந்தக் காட்சிகள் இறுதியாக ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால், கரூர் சம்பவத்துக்கும் ‘ஜனநாயகன்’ படப்பிடிப்புக்கும் தொடர்பு இருந்ததா என்ற விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. ஒருபுறம் இயக்குநர் எச். வினோத் படப்பிடிப்பு நடந்ததாகக் கூறப்படுவதை மறுக்கும் நிலையில், மறுபுறம் சவுக்கு சங்கர் அதற்கு மாறான தகவலை முன்வைத்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதற்கிடையில், ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் சட்டவிரோதமாக அணுகப்பட்டு பகிரப்பட்டதாக தயாரிப்பு தரப்பு ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சவுக்கு சங்கர் தற்போது முன்வைத்துள்ள இந்தக் கூற்றுக்கு அதிகாரப்பூர்வ விசாரணை அமைப்புகளிடமிருந்து உறுதியான விளக்கம் வெளியாகுமா என்பதே அடுத்த கேள்வியாக உள்ளது.
What's Your Reaction?