வேட்பாளர் தேர்வில் தொடரும் சிக்கல்: அறிவிப்பு வெளியிடுவதில் காங், பாஜக மந்தம்
தமிழக சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்களை காங்கிரஸ், பாஜக அறிவிக்காமல் இருப்பது அக்கட்சி தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4-ம் தேதி எண்ணப்படுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் நேற்றைய தினம் தொடங்கியது. முதல்நாளில் முதல்வர் ஸ்டாலின், தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் சீமான் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேட்புமனுதாக்கல் செய்தனர்.
திமுக உள்பட கூட்டணி கட்சிகள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. ஆனால் காங்கிரசு மட்டும் இன்னும் அறிவிக்கவில்லை. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசு கட்சிக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. கேரளாவில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தில் இருப்பதால் தான் தமிழக வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியவில்லை என செல்வபெருந்தகை விளக்கம் அளித்துள்ளார்.
நாளை தமிழக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வேட்பாளர் தேர்வு தாமத்திற்கு மாற்றொரு காரணமும் கூறப்படுகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட் கேட்பதே இந்த தாமத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற பாஜகவிற்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக பாஜக வேட்பாளர் அறிவிப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை வர உள்ளார். இவர் தமிழக பாஜக வேட்பாளர் பட்டியலை டெல்லிக்கு எடுத்து செல்ல உள்ளார். அங்கு பார்லிமென்டரி போர்டு கமிட்டி கூட்டத்தில் இந்த பட்டியல் வைக்கப்பட்டு, வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு, நாளை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
What's Your Reaction?

